சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூரில் நீட் தேர்வுக்கு அஞ்சி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவர் தனுஷ் உடலுக்கு எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, மாணவரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த உதயநிதி, திமுக சார்பில் அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கினார்.


முன்னதாக, மாணவர் தனுஷின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


சேலம் மாவட்டம் கூழையுர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சிவக்குமார் என்பவரின் இரண்டாவது மகன் தனுஷ் (19). ஏற்கனவே இரண்டுமுறை நீட் தேர்வில் தோல்வி அடைந்த நிலையில், இம்முறையும் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் இருந்தார் எனக் கூறப்படுகிறது. இந்தநிலையில் தனுஷ், தனது வீட்டின் முற்றத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


நீட் தேர்விற்கு இதற்கு முன்பு பல மாணவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், மாணவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் நீட் தேர்விற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வின் போது மாணவர்கள் தோல்வி அச்சத்தில் தற்கொலை செய்து வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து தெரிவித்துவந்த நிலையில். இன்று மதியம் நடக்கவிருந்த நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த கூழையுரை சேர்ந்த தனுஷ் என்னும் 19 வயது மாணவர் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.


சேலம் மாணவர் தற்கொலை : மாணவர்கள் விபரீத முடிவுகளை எடுக்கவேண்டாம் - முதல்வர்


மறைந்த மாணவன் தனுஷ் பத்தாம் வகுப்பில் 488 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இன்று மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுதுவதற்காக தயாராகி வந்தார். அவருக்கு மேச்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இன்று தேர்வு எழுத ஹால் டிக்கெட் வந்துள்ளது. நேற்று தனது நண்பர்களிடம் மூன்றாவது முறையும் தேர்ச்சி பெறாவிட்டால் தனது  மருத்துவர் கனவு கலைந்து போகும்என்று கூறி வந்துள்ளார்.


நேற்று நள்ளிரவு வரை தனது அறையில் படித்துக் கொண்டிருந்தார். அவரது பெற்றோர் வேறு அறையில் உறங்கச் சென்றுள்ளார். இன்று அதிகாலை அவரது தாயார் சிவஜோதி எழுந்து பார்த்தபோது மகன் தூக்கிட்டு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.




சம்பவம் குறித்து தகவல் அறிந்த கருமலைக்கூடல் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது மாணவரின் உடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் மாணவர் தனுஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


விவசாயி மகன் நீட் தேர்வு அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கூழையூர் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


தயவுசெய்து உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவை எடுக்காதீர்கள் - அமைச்சர் மா. சுப்ரமணியன்..