நாடு முழுவதும் இன்று மருத்துவ இளநிலை படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெறவுள்ளது. இந்த நிலையில், சேலம் மாவட்டம் கூழையூரில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தனுஷ் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். ஒவ்வொரு நீட் தேர்வின்போதும் மாணவர் தற்கொலைகளை எதிர்கொண்ட சமூகம், இந்த தேர்வின்போதும் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதை பார்க்கிறது. இது மாநிலம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்த நிலையில், தூத்துக்குடியில் மெகா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, “தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் இடங்களில் 22 லட்சம் பேருக்கு இன்று தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நேற்று இரவு வரை தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 74 லட்சத்து 8 ஆயிரத்து 989 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். தனியார் மருத்துவமனை மூலம் இதுவரை 22 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.




மத்திய அரசு இதுவரை மாநில அரசுக்கு 3 கோடியே 51 லட்சத்து 78 ஆயிரத்து 816 தடுப்பூசிகள் வந்துள்ளது. தமிழகத்தில் போலி தடுப்பூசி கிடையாது. போலி மருத்துவர்கள் குறித்து அரசு கண்காணித்து வருகிறது. கேரளம் மாநிலத்தில் இருந்து வான்வழி மற்றும் தரைவழி மார்க்கமாக வருபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.


நீட் தேர்வு குறித்து பிரதமர் மோடியிடம் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பலமுறை பேசியுள்ளோம். எனவே, வரும் திங்கட்கிழமை கூட்டத்தொடரின் இறுதிநாளாகும். அன்றைய தினம் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வர உள்ளார். அந்த தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஒப்புக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற அழுத்தம் கொடுக்கவில்லை. அதுபோன்று இல்லாமல், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி போதிய அழுத்தம் தந்து நீட் தேர்வில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விலக்கு பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கை அனைவரிடமும் உள்ளது.




தமிழகத்தில் 18 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. 18 வயதிற்கு கீழே உள்ளவர்களுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கான அனுமதியும் கிடைத்துள்ளது. மற்ற மாநிலங்கள் நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் தமிழகத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டு, 18 வயது கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.


மாணவ, மாணவிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வது சரியான முடிவாக இருக்காது. குறுகிய காலம் என்பதால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. மாணவர்கள் மனம் தளரக்கூடாது”


இவ்வாறு அவர் கூறினார்.