நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழக கட்சியைத் தொடங்கிய பிறகு, அரசியல் தொடர்பாக பெரியளவில் எந்தவொரு கருத்தையும் அவர் பேசவில்லை. இந்த சூழலில், தமிழக வெற்றிக்கழக கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. முதற்கட்ட விருது வழங்கும் விழாவில், போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்து நடிகர் விஜய் பேசினார்.
ஒன்றிய அரசு என்று குறிப்பிட்ட விஜய்:
இந்த சூழலில், இன்று சென்னையில் நடைபெற்ற இரண்டாம் கட்ட விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் நீட் தேர்வு குறித்து பேசினார். அவரது பேச்சில் நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்பு, நீட் தேர்வு நம்பகத்தன்மை குறித்து பேசினார்.
மேலும், கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். நடிகர் விஜய் இன்றைய பேச்சின்போது மத்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டு பேசினார். தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் பொதுவாக மத்தியில் ஆளுங்கட்சியை மத்திய அரசு என்று குறிப்பிட்டே வந்தனர். ஆனால், மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு ஆட்சியில் அமைந்தது முதல் மத்திய பா.ஜ.க. அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டு வருகின்றனர்.
தி.மு.க. பாணியில் விஜய்:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள். எம்.பி.க்கள் அனைவரும் ஒன்றிய அரசு என்றே குறிப்பிட்டு வருகின்றனர். இதற்கு பா.ஜ.க.வினர் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒன்றிய அரசு என்று குறிப்பிடுவதற்கு தி.மு.க. தலைவர்களும், நிர்வாகிகளும் விளக்கம் அளித்துள்ளனர். இந்த நிலையில், த.வெ.க. தலைவர் விஜய்யும் இன்று மத்திய பா.ஜ.க. அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பே. மெர்சல் உள்ளிட்ட அவரது படங்களில் இடம்பெற்ற சில வசனங்களுக்கு பா.ஜ.க. தலைவர்கள் கடுமையாக விமர்சனங்களை தெரிவித்து இருந்தனர். அப்போது முதலே நடிகர் விஜய்க்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த சூழலில், நடிகர் விஜய் இன்று மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்த நீட் தேர்வை கடுமையாக விமர்சித்ததுடன், நீட் தேர்வை ரத்து செய்வதே ஒரே தீர்வு என்றும் பேசியுள்ளார். நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்த விஜய், நீட் தேர்வு நடத்தப்படும் விதத்தையும் விமர்சித்துள்ளார்.
மத்திய அரசின் செயல்பாடுகளை மிக கடுமையாக விமர்சித்துள்ள விஜய், தி.மு.க. பாணியில் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டும் பேசியுள்ளார்.
மேலும் படிக்க: நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
மேலும் படிக்க: Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்