கோவை சிட்ரா பகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”செங்கோல் என்றால் பெண்களை இழிவுபடுத்துவது என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பேசியிருக்கிறார். ஆனால் அவரே மதுரை பெண் மேயரிடம் செங்கோல் வழங்கும் புகைப்படம் இருக்கிறது. இது பெண் மேயரை அடிமைப்படுத்துவது என எடுத்துக் கொள்ள முடியுமா?பாராளுமன்றத்தில் செங்கோல் குறித்து புதிய லாஜிக்குடன் சு. வெங்கடேசன் பேசியிருக்கிறார். செங்கோல் குறித்து வள்ளுவர் சிறப்பு அதிகாரமே கொடுத்திருக்கிறார்.
திருவள்ளுவர் செங்கோலுக்கு பத்து குறல் கொடுத்திருப்பது தவறு என சொல்லலாமா? நான் சு.வெங்கடேசனின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்ட மனிதன். காவல் கோட்டம் உள்ளிட்ட நாவல்களை விரும்பி படித்து இருக்கிறேன். திமுகவை கைவிட்டு விடக்கூடாது என சு.வெங்கடேசன் பேசக்கூடிய கருத்து கொஞ்சம் கூட ஏற்றுக் கூடியதாக இல்லை.
அரசியல் படிப்பு
சர்வதேச அரசியல் குறித்து படிப்பதற்காக லண்டன் செல்வது குறித்து நேரம் வரும் போது பேசுகின்றேன். இன்னும் நாள் இருக்கின்றது. கட்சி அனுமதி கொடுக்க வேண்டும். அரசியல் சூழலை பார்த்து கட்சி தலைமை முடிவெடுக்கும். கட்சி அனுமதி கொடுக்கும் பொழுது இதைப் பற்றி வெளிப்படையாக பேசுகின்றேன். காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை போல பேட்டை ரவுடியாகவோ, குண்டராகவோ இல்லாமல் இருக்கிறேன். இப்பொழுது காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக அமர்ந்திருக்கிறார். காமராஜ் இருந்த கட்சி செல்வப் பெருந்தகை போல மூன்றாம் தர ரவுடி என்று சொல்லாமல் என்னைப் பற்றி சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன். மாநில கல்வி கொள்கை குறித்து அறிக்கை வெளியிட இருக்கிறோம். 2020 புதிய கல்வி கொள்கையில் தாய்மொழி தான் பிரதான படமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறோம். மாநிலக் கல்விக் கொள்கையின் முதல் பக்கத்தில் அதைத்தான் சொல்லியிருக்கின்றனர்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் அனைத்து பள்ளிகளிலும் தகவல் தொழில்நுட்பங்கள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் கல்விக் கொள்கையில் இதைத்தான் சொல்லியிருக்கின்றது. நூலகம் எப்படி இருக்க வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கையில் சொல்லி இருப்பதை போலவே, மாநில கல்விக் கொள்கையிலும் சொல்லியிருக்கின்றனர். மாநில கல்விக் கொள்கையில் கோச்சிங் சென்டரை தடை செய்ய வேண்டும் என சொல்கின்றனர். உருது பள்ளிகள் துவங்க வேண்டும் என மாநில கல்வி கொள்கையில் சொல்லி இருக்கின்றனர். ஒரு பக்கம் இந்தி வேண்டாம் என்கின்றனர். இன்னொரு பக்கம் உருது பள்ளி துவங்க வேண்டும் என்கின்றனர். கடற்கரையோர பகுதிகளைச் சேர்ந்த மீனவர் குடும்பத்தினர் கப்பல் பற்றியும், கடல் பற்றியும் சொல்லிக் கொடுப்பது குலக் கல்வி இல்லையா? மத்திய அரசு கொண்டு வந்திருப்பதை கட், காப்பி,பேஸ்ட் செய்து மாநிலக் கல்வியை கொள்வது தயாரிக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையில் என்ன தவறு இருக்கிறது என்பதை இதில் சொல்லவே இல்லை. கல்வி மத்தியில் இருக்க வேண்டுமா? மாநிலத்தில் இருக்க வேண்டுமா? என்பதை விவாதிக்கலாம். அது அவரவர் தனிப்பட்ட உரிமை.
ராகுல்காந்தி பொய் சொல்கிறார்
ராகுல் காந்தி வாய் இருக்கிறது என பேசுகிறார். இதற்கு காங்கிரஸ் கட்சியில் உள்ள கொத்தடிமைகள் கைதட்டுவார்கள். ராகுல் காந்தி பேசுவதை சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் அவர் சொல்லி இருக்கும் பொய்களை எடுத்து சொல்ல வேண்டும். அக்னி பாத் திட்டத்தில் இறந்தவர்களுக்கு பணம் கொடுக்கவில்லை என்று பொய் சொல்லி இருக்கிறார். பாஜகவில் இருப்பவர்கள் இந்துக்களை இல்லை என்று சொன்னால் கோபம்வரத்தான் செய்யும். இந்து மதத்தில் பிறந்த எங்களுக்கு உரிமை இருக்கிறதா? அல்லது ராகுல் காந்திக்கு உரிமை இருக்கிறதா என்பதை மக்கள் மன்றத்தில் வைக்கிறோம். உண்மையான ஹிந்து என்பவன் இஸ்லாத்தையும் கிறிஸ்துவத்தையும் மதிக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இரண்டரை ஆண்டுகளில் விலைவாசி எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது. எல்லா மாநிலத்துக்கும் ஒரு முதல்வர் தான். இங்கு மூன்று முதல்வர்கள் இருக்கின்றனர். பையனும் மருமகனும். மெக்காலே கொடுத்த ஐபிசி உள்ளிட்ட சட்டங்கள் மாற்றப்படுகிறது. சட்டம் என்னவென்று தெரியாமல் இதை பேசக்கூடாது. இந்த சட்டம் ஆங்கிலத்தில் வேண்டும் என்ற கருத்தில் உடன்பாடு இருக்கிறது. அனைத்து கருத்துக்களையும் கேட்டு உள்ளே எடுத்து இருக்கின்றனர். மத்தியில் சில கருத்துக்களையும் சொல்லி இருக்கிறோம். கொஞ்சம் பொறுத்து இருங்கள்.
மேயர்கள் மாற்றத்திற்குள் செல்லவில்லை. மேயர்கள் டம்மியாக போட்டிருந்தது இவர்கள்தான். மேயரை முட்டாளாக போட்டால் உதயநிதி ஸ்டாலின் அறிவாளியாக தெரிவார். தமிழகத்தில் நாய் செத்துப் போச்சு, அந்த நாய் பக்கத்தில் அண்ணாமலை சென்றால் அதற்கு அண்ணாமலைதான் காரணம் என்று சொல்வார்கள். யாராவது அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்திருந்தால் அண்ணாமலை தான் காரணம் என்கின்றனர். ஏர்போர்ட்டில் அண்ணாமலை மிரட்டி வசூல் செய்ய செய்தார் என்று சொல்லி இருக்கின்றனர். தமிழ்நாட்டில் எவன் குற்றம் செய்திருந்தாலும் அண்ணாமலை என்கின்றனர். எங்கே எது நடந்தாலும் என் தலையில் கட்டுகின்றனர்” எனத் தெரிவித்தார்.