தமிழக வெற்றிக் கழகத்தின் மாணவர்களுக்கான கல்வி விருது வழங்கும் விழாவின் இரண்டாவது கட்டம் இன்று நடந்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கும் முன்பு நடிகரும், தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் பேசியதாவது,
நீட் தேர்வு:
"நீட் தேர்வு என்பது தமிழ்நாட்டில் மாணவ, மாணவிகளை கிராமப்புற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் என்பதுதான் சத்தியமான உண்மை. நீட்டைப் பொறுத்தவரை 3 பிரச்சினைகளாக நான் பார்ப்பது.
நீட் மாநில உரிமைகளுக்கு எதிரானது. 1975ம் ஆண்டுக்கு முன்பு கல்வி மாநிலப்பட்டியலில் இருந்தது, அதன்பின்பே, ஒன்றிய அரசு வந்த பிறகு பொதுப்பட்டியலில் சேர்த்தார்கள். அதுதான் முதல் பிரச்சினையாக தொடங்கியது. 2வதாக ஒரே நாடு, ஒரே பாடத்திட்டம், ஒரே தேர்வு. இது கல்வித்தரத்திற்கான நோக்கத்திற்கு எதிரானது.
நீட் தேர்வு தேவையில்லை:
இது கல்வித்தரத்தின் நோக்கத்திற்கு எதிரானது. ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்றவாறு பாடத்திட்டம் இருக்க வேண்டும். இது மாநில உரிமைகளுக்காக மட்டும் கேட்கவில்லை. பன்முகத்தன்மை என்பது பலமே தவிர, பலவீனம் அல்ல.
மாநில மொழியில் படித்துவிட்டு, என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தில் தேர்வு வைத்தால் அது எப்படி? அதுவும் கிராமப்புறத்தில் இருக்குற மாணவ, மாணவிகளின் மருத்துவ படிப்புக்கு அது எவ்வளவு கடினமானது?மூன்றாவதாக நான் பார்ப்பது, நீட் தேர்வில் குளறுபடி நடந்ததாக செய்திகளில் பார்த்தேன். நீட் தேர்வு மீதான நம்பகத்தன்மையே மக்கள் மத்தியில் போய்விட்டது. நாடு முழுவதும் நீட் தேர்வு தேவையில்லை என்பதே நாம் புரிந்து கொண்ட ஒன்று. இதற்கு என்னதான் தீர்வு என்றால் நீட் தேர்வு விலக்கு.
சிறப்பு பொதுப்பட்டியல்:
நீட் ரத்து கோரி தமிழக சட்டமன்றம் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். இதற்கு ஒன்றிய அரசு காலதாமதம் செய்யாமல், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து சீக்கிரம் தீர்வு காண வேண்டும். இதற்கு நிரந்தர தீர்வு என்னவென்றால் கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்.
அதில் சிக்கல் இருந்தால் இடைக்கால தீர்வாக சிறப்பு பொதுப்பட்டியலை கொண்டு வந்து அதில் கல்வி, சுகாதாரத்தை சேர்க்க வேண்டும். இப்போ இருக்குற பொதுப்பட்டியலில் என்ன பிரச்சினை என்றாலும், மாநில அரசுக்கு என்னதான் அதிகாரம் இருந்தாலும் அது ஒன்றிய அரசிடம்தான் கட்டுப்பாடு இருக்கிறது. அதனால், மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரத்தை தர வேண்டும் என்பதுதான் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.
வெற்றி நிச்சயம்
ஒன்றிய அரசு அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கிற எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மருத்துவ நிறுவனங்களுக்கு நீட் தேர்வை நடத்துவது என்றால் நடத்திக் கொள்ளலாம். இது என்னுடைய வேண்டுகோள். அனைத்து கற்றுக்கொள்வது என்பது சந்தோஷம். கல்வி என்பது கொண்டாட்டம். மகிழ்ச்சியாக படியுங்கள். மன அழுத்தம் கொள்ளாதீர்கள். இந்த உலகம் ரொம்ப ரொம்ப பெருசு. வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது. ஒன்றிரண்டு தவறவிட்டாலும் சோர்ந்து விடாதீர்கள். கடவுள் இன்னொரு மிகப்பெரிய வாய்ப்பை உங்களுக்காக வைத்துள்ளார் என்று அர்த்தம். நம்பிக்கையுடன் இருங்கள். வெற்றி நிச்சயம்."
இவ்வாறு அவர் பேசினார்.