தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையால் நடத்தப்படும் திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப்பள்ளியானது கிரிவலப்பாதை செங்கம் ரோடு (நேரு யுவகேந்திரா அலுவலகம் பின்புறம்) சமுத்திரம் கிராமம் திருவண்ணாமலை 606 603 என்கிற முகவரியில் இயங்கி வருகிறது.
இப்பள்ளியில் தமிழகத்தின் கலைகள்
1.குரலிசை 2.நாதசுரம் 3.தவில் 4.தேவாரம் 5.பரதநாட்டியம் 6. வயலின் 7. மிருதங்கம் ஆகிய ஏழு கலைப் பிரிவுகளில் மூன்றாண்டு சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி வகுப்புகள் வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. 13 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் இப்பயிற்சியில் சேரலாம்.
பயிற்சிக் காலம்
மூன்று ஆண்டுகள் பயிற்சி முடிவில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படுகிறது. சேர்க்கை கட்டணமாக முதலாம் ஆண்டிற்கு ரூபாய் 350, இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு கட்டணமாக ரூபாய் 325 மட்டும் செலுத்தப்பட வேண்டும். மாணவ மாணவியருக்கு இலவச பேருந்து பயணச்சலுகை மற்றும் மாதந்தோறும் ரூபாய் 400 அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை அளிக்கப்படுகிறது. இசைப்பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இசை ஆசிரியராக பணிபுரியவும் நாதஸ்வரம், தவில், தேவாரம் பயின்ற மாணவர்கள் திருக்கோயில்களில் பணிபுரியவும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
விண்ணப்பம் பெறுவது எப்படி?
தமிழகத்தின் பாரம்பரியம் மிக்க கலைகளை பயிலுவதற்கு உரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இப்பள்ளியில் சேர்ந்து பயில விண்ணப்பம் பெற சு.சியாமகிருஷ்ணன் தலைமை ஆசிரியர் மாவட்ட அரசு இசைப்பள்ளி கிரிவலப் பாதை செங்கம் ரோடு (நேரு யுவகேந்திரா அலுவலகம் பின்புறம்) சமுத்திரம் கிராமம் திருவண்ணாமலை 606 603 எனும் முகவரியில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரம் வேண்டுவோர் இசைப்பள்ளி அலுவலகத்தை 04175-235545, 9442507657, 8667399314 என்கிற எண்களில் தொடர்பு கொண்டுசேரலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.