கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் திருநங்கைகள் தாலிக் கட்டிக் கொண்டு கும்மியடித்து பாட்டுப்பாடி மகிழ்ச்சி கொண்டாட்டம்.
மகாபாரத போர்
மகாபாரதப் போரின் வரலாற்றை மையப்படுத்தியே ஒவ்வொரு ஆண்டும் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. வீரம், விவேகம், அழகு உள்ளிட்ட 32 லட்சணங்களைக் கொண்ட ஒருவரை பலிக் கொடுத்தால் தான் மகாபாரதப் போரில் வெற்றி கிடைக்கும் என்பதற்காக 32 லட்சணங்களையும் கொண்ட அரவான் என்ற இளவரசனை பலி கொடுக்க பஞ்ச பாண்டவர்கள் முடிவு செய்கிறார்கள். இந்நிலையில் தான் இறப்பதற்கு முன்பு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அரவான் ஆசைப்படுகிறார். சாகப்போகும் ஒருவருக்கு யார் பெண் கொடுப்பார்கள் என பஞ்ச பாண்டவர்கள் கவலையடையும் போது கிருஷ்ண பகவான் அழகிய பெண் உருவம் கொண்டு அரவானை திருமணம் செய்து கொள்கிறார். இதன்பின்னர், அரவான் களபலி கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பெண் உருவத்தில் இருந்த கிருஷ்ணர், கணவனை இழந்த பெண்ணுக்கு செய்யும் சடங்குகளான கை வளையல்களை உடைத்து, நெற்றி பொட்டை அழித்து, தாலி துறந்து, வெள்ளை சேலை உடுத்தி கைப்பெண் கோலத்தை ஏற்றுக் கொள்கிறார்.
இத்தகைய சிறப்புமிக்க புராண வரலாற்றை நினைவுக் கூறும் வகையில் உலகத்திலேயே திருநங்கைகளுக்கு என்றே தனியாக அமைந்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுத்தோறும் சித்திரை மாதத்தில் திருநங்கைகள் ஒன்று கூடி விழா எடுத்து கொண்டாடி வருகின்றனர். அதன்படி, இந்த ஆண்டு கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 9ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கூத்தாண்டவர் கோயிலில் தாலி கொட்டிக்கொண்ட திருநங்கைகள்
இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகள் தாலிக் கட்டி திருமணம் செய்து கொள்ளும் வைபவம் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இதனையொட்டி தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும் வந்துள்ள ஏராளமான திருநங்கைகள் பட்டு சேலை உடுத்தி, ஆபரணங்களை அணிந்து மணப்பெண்ணைப் போல அலங்கரித்து கொண்டு கூத்தாண்டவர் சாமியே தங்களுக்கு தாலிக் கட்டுவதாக நினைத்து கோயில் பூசாரிகளிடம் தாலிக் கட்டி திருமணம் செய்து கொண்டு வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து கூத்தாண்டவருக்கு மனைவியானதை நினைத்து கும்மியடித்து, பாட்டுப்பாடி திருநங்கைகள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வண்ணம் இருக்கின்றனர்.