Edappadi Palanisamy: எடை கணக்கில் தக்காளி வாங்கி நிலை மாறி தற்போது எண்ணிக்கை கணக்கில் பயன்படுத்தும் நிலை உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.


எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு:


சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியம் குரும்பபட்டி பகுதியில் அதிமுக சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு அதிமுகவின் கொடியேற்றி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, ”எடப்பாடி தொகுதி மக்களின் கோரிக்கைகளை அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 100 ஏரிகள் புரணமைப்பு  திட்டத்தினை திமுக அரசு முடக்கி வைத்துள்ளது. ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்ட முதியோர்களுக்கான உதவித் தொகை பலருக்கு நிறுத்தப்பட்டுள்ளது.


மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் எந்தெந்த முதியோருக்கு உதவித் தொகை நிறுத்தப்பட்டதோ அவர்களுக்கு முதியோர் உதவித் தொகை வழங்கப்படும். அதிமுக கொண்டு வந்த ஒவ்வொன்று திட்டங்களையும் திமுக அரசு முடக்கி வருகிறது. அறிவுப்பூர்வமான கல்வி கிடைக்கும் வகையில் வழங்கப்பட்ட லேப்டாப் கலை அரசு நிறுத்தி உள்ளது” என்றார். 


மேலும், "திமுக தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. சட்டமன்றத்தில் பேசியும் பயனில்லை. அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். எந்த நிபந்தனையும் இல்லாமல் அனைவருக்கும் வழங்கப்படும் என அறிவித்தார். தற்போது தகுதியானவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ஆட்சியில் இருக்கும்போது ஒரு பேச்சு எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு" என்றார் எடப்பாடி பழனிசாமி.


”தக்காளிக்கு பதில் ஆப்பிள்"


தொடர்ந்து பேசிய அவர், ”சிமெண்ட் விலை விண்ணை முட்டும் வகையில் உயர்ந்துள்ளது. ஏழை மக்கள் வீடு கட்டுவது எட்டாக்கனியாகியுள்ளது. கட்டுமான பொருட்கள் விலை 100 சதவீதம் உயர்ந்துள்ளது. சிமெண்ட் தொழிற்சாலை நடத்தும் தொழில் அதிபர்களுடன்  கூட்டணி வைத்துக்கொண்டு அவர்களுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ என்பதை சரியாக செய்கின்றனர்.


அதிமுக ஆட்சிக் காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயராமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டுகிறது. தக்காளி விற்கும் விலைக்கு ஆப்பிள் வாங்கிக் கொள்ளலாம். ஏனெனில் ஆப்பிள் விலைக்கு தான் தக்காளி இருக்கிறது. கிலோ கணக்கில் தக்காளி வாங்க முடியாது. எண்ணிக்கை கணக்கில் தான் வாங்க முடியும். இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தனக்கு பிறகு தன் மகனை ஆட்சி அதிகாரத்தில் கொண்டுவர வேண்டும் என்பதுதான் முதல்வரின் நோக்கம். மக்கள் படும் துயரங்கள் வேதனைகள் பற்றி முதல்வருக்கு கவலை இல்லை” என்றார் எடப்பாடி பழனிசாமி.




மேலும் படிக்க 


"தூக்கு தண்டனை கொடுக்காவிட்டால் மனிதர்களே இல்லை" - மணிப்பூர் சம்பவம் குறித்து ஹர்பஜன் சிங்!