இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், ராஜ்யசபா உறுப்பினருமான ஹர்பஜன் சிங், மணிப்பூர் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மணிப்பூர் சம்பவம் - ஹர்பஜன் சிங் கருத்து
மணிப்பூரில் மூன்று பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக சென்ற கும்பலின் குரூர செயலுக்கு எதிராக ஹர்பஜன் சிங் சில அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். அவர்களுக்கு எதிராக மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். செய்தி நிறுவனமான பி.டி.ஐ-இடம் ஹர்பஜன் சிங் பேசுகையில், "குற்றவாளிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். யாரும் தப்ப முடியாது என்று பிரதமர் ஏற்கனவே கூறியிருக்கிறார்" என்றார்.
ஹர்பஜன் டிவீட்
முன்னதாக மற்றொரு ட்வீட்டை பதிவிடும்போது அவர் இந்த கொடூரமான சம்பவம் குறித்து கருத்து தெரிவித்தார். "கோபம் என்று சொன்னால் அது குறைவு. ஆத்திரத்தில் மரத்துப் போனேன். மணிப்பூரில் நடந்ததைக் கண்டு நான் இன்று வெட்கப்படுகிறேன். இந்தக் கொடூரக் குற்றத்தைச் செய்தவர்களை வழக்குப்பதிவு செய்து, கொண்டு வந்து தூக்கு தண்டனை கொடுக்காவிட்டால், நம்மை நாமே மனிதர்கள் என்று அழைப்பதை நிறுத்திக்கொள்ளலாம். இது நடந்திருப்பது எனக்கு வேதனை அளிக்கிறது. நடந்தது நடந்துவிட்டது, அரசு நடவடிக்கை எடுத்தால் போதும்" என்று அவர் எழுதினார்.
வழக்குப்பதிவு
இந்த சம்பவம் குறித்து இதுவரை பல விளையாட்டு வீரர்கள் கருத்து தெரிவிக்காத நிலையில், விளையாட்டு பிரபலங்கள் வட்டாரத்தில் இருந்து முதல் குரலாக ஹர்பஜன் சிங்கின் குரல் வந்துள்ளது. அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய நபர்கள் மீது தௌபல் மாவட்டத்தில் உள்ள நோங்போக் செக்மாய் காவல் நிலையத்தில் கடத்தல், கூட்டு பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் போலீசார் தெரிவித்தனர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
மே 3 கலவரம்
மே 3 அன்று மணிப்பூரில் இன வன்முறை வெடித்ததில் இருந்து 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். மே 3 அன்று மலை மாவட்டங்களில் உள்ள மக்கள், மேத்தி சமூகத்தின் பட்டியல் பழங்குடி (ST) அந்தஸ்து கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து 'பழங்குடியினர் ஒற்றுமை அணிவகுப்பு' நடத்தினர். அப்போது ஏற்பட்ட கலவரம் இந்த பிரச்சனைகளுக்கு வழி வகுத்துள்ளது. மணிப்பூரின் மக்கள்தொகையில் சுமார் 53 சதவீதம் பேர் மேத்தி இனத்தவர்கள் ஆவார்கள். இந்த மக்கள் இம்பால் பள்ளத்தாக்கில் வாழ்கின்றனர், அதே சமயம் நாகாக்கள் மற்றும் குக்கிகள் அடங்கிய பழங்குடியினர் 40 சதவீதத்தினர் பேராக உள்ளனர். அவர்கள் பெரும்பாலும் மலை மாவட்டங்களில் வசிக்கின்றனர்.