சமூக விரோதிகளின் கூடாரமாக தமிழக பாஜக மாறுவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு விமர்சித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு தினத்தை ஒட்டி தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை தமிழக அரசு நடத்தி வருகிறது. மருத்துவமனை திறப்பது, நூலகம் அமைப்பது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது, கருத்தாக்க நிகழ்ச்சிகளை நடத்துவது உள்ளிடவைகள் திமுக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் 160 திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அதில், அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா ராஜன் மற்றும் பரதநாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் பங்கேற்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, பாஜகவை கடுமையாக சாடினார். திமுகவில் உள்ளவர்கள் ரவுடிகள் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்ததற்கு பதிலளித்து பேசிய அமைச்சர், “இந்த ஆண்டு சமூக விரோதிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் பட்டியலில் பாஜகவினரே அதிகம் இருப்பதாகவும், தமிழக பாஜக சமூக விரோதிகளின் கூடாரமாக இருப்பதாகவும் கூறினார். அவர்கள் தினமும் அவதூறு பரப்பி, சட்டம் ஒழுங்கை கெடுப்பது, மதவாதத்தை தூண்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டினார். ஒற்றுமையாக இருக்கும் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்றும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
அவதூறு பரப்பும் வகையில் திமுகவினர் பேசினாலும், சிறிய தவறு செய்தாலும் கூட அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் நடைப்பயணம் குறித்து பேசிய அமைச்சர், 100 அண்ணாமலை வந்தாலும் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் முதலமைச்சர் தலைமையிலான கூட்டணியே 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றார். மேலும், அண்ணாமலை மேற்கொள்ள நடைப்பயணத்தில் வைக்கப்படும் புகார் பெட்டியில், ஒவ்வொரு மாவட்டத்திலும் பாஜகவினர் செய்யும் கட்டப் பஞ்சாயத்து, ரவுடித் தனத்தை பற்றித்தான் மக்கள் புகார் தெரிவிப்பார்கள் என கூறினார்.
மேலும் படிக்க: Manipur Violence: சுதந்திரப் போராட்ட வீரரின் மனைவி உயிரோடு எரித்து கொலை.. மணிப்பூரில் மீண்டும் கொடூரம்..