தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினரை நியமிக்கும் வரை தமிழ்நாடு மின்வாரியம் அளித்த மின் கட்டண உயர்வு கோரிக்கை மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு நூற்பாலைகள் சங்க தலைமை ஆலோசகர் கே.வெங்கடாச்சலம், அருணா அலாய்ஸ் ஸ்டீல் நிறுவன மேலாண்மை இயக்குனர் அருண் அருணாச்சலம், ஸ்ரீபதி பேப்பர் அன்ட் போர்ட்ஸ் நிறுவன பொது மேலாளர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தனர்.
அதில், "தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் இருக்க வேண்டும். தற்போது தலைவர் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் மட்டுமே உள்ளனர். சட்டத்துறை சார்ந்த உறுப்பினர் இல்லை. இந்நிலையில் தமிழகத்தின் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி மின்வாரியம் சார்பில் ஒழுங்குமுறை ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஒழுங்குமுறை ஆணையம் விசாரணைக்கு ஏற்று, பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறது.
மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் இருந்தால் மட்டுமே மின் கட்டண உயர்வு விவகாரத்தில் முழுமையான முடிவெடுக்க முடியும். தலைவர் மற்றும் ஒரு உறுப்பினர் மட்டும் இருக்கும் நிலையில் ஒழுங்குமுறை ஆணையம் கூடியது சட்டவிரோதமானது. எனவே, மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கும் வரை கட்டண உயர்வு தொடர்பாக முடிவெடுக்கவும், கருத்து கேட்பு கூட்டம் நடத்தவும் தடை விதிக்க வேண்டும்" என கூறியிருந்தனர்.
இதனை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவின் விவரம்:
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தொழில்நுட்ப உறுப்பினர் 17.3.2022-ல் ராஜினாமா செய்தார். சட்டத்துறை உறுப்பினர் 5.5.2022-ல் ஓய்வு பெற்றார். இரண்டு காலியிடங்களையும் அரசு ஒரே நேரத்தில் நிரப்பியிருக்கலாம். மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை சேர்ந்தவர் கண்டிப்பாக இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.
இதனால் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கும் வரை தமிழ்நாடு மின்வாரியம் அளித்த மின் கட்டண உயர்வு கோரிக்கை மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை விதிக்கப்படுகிறது.
இந்த தடை உத்தரவு சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கும் வரை அமலில் இருக்கும். நியமனத்துக்கு பிறகு தடை நீங்கிவிடும். அதே நேரத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தலாம். மனுதார்கள் தங்களின் ஆட்சேபனைகள் மற்றும் கோரிக்கைகளை ஒழுங்குமுறை ஆணையத்திடம் தெரிவிக்கலாம்" என்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும் வாசிக்க.. Vijayakanth Birthday: ரஜினியுடன் நடிப்பு.. 3டி படம்.. விஜயகாந்த் பற்றி சுவாரஸ்யமான சில தகவல்கள்!