காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்காவிற்கு உட்பட்ட பழவேரி கிராமத்தில் தனியார் கல் குவாரியை நடத்தி வருபவர் தனசேகர். இந்நிலையில் பழவேரி பகுதியில் செயல்படும் கல் குவாரியால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக கூறி புகார்கள் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவின் பேரில் வருவாய் மற்றும் நில அளவைத் துறை அலுவலர்கள் கல்குவாரியில் ஆய்வு செய்து தணிக்கை மேற்கொண்டுள்ளனர்.



மேலும் அரசின் வழிகாட்டு விதிமுறைகளை மீறி கல்குவாரி செயல்பட்டு உள்ளதை ஆய்வுகள் மூலம் கண்டறிந்த புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் லட்சுமி பிரியா ஆய்வறிக்கையை மாவட்ட நிர்வாகத்திடம் சமர்பித்ததால் கல்குவாரி உரிமையாளருக்கு 2 முதல் 3 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.



 

இதனால் ஆத்திரமடைந்த கல் குவாரி உரிமையாளர் தனசேகர் மற்றும் அவரது மகன் கார்த்திகேயன் என்பவரும் துணை இயக்குனர் லட்சுமி பிரியாவிற்கு மிரட்டல் விடுத்து அரசு பணியை செய்ய விடாமல் அச்சுறுத்தியதாக தெரிகிறது. கல்குவாரி உரிமையாளர்களின் அச்சுறுத்தல் குறித்து துணை இயக்குனர் லட்சுமி பிரியா, சாலவாக்கம் போலீசில் புகார் தெரிவித்தார்.



 

புகாரின் பேரில் சாலவாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு, ஆபாசமாக பேசுதல் 294(b), அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல் 353, கொலை மிரட்டல் 506(1), பெண் வன்கொடுமை சட்டம்,ஆகிய நான்கு சட்ட பிரிவுகளின் கீழ் குற்ற வழக்கு பதிவு செய்தனர். குற்ற வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் சாலவாக்கம் போலீசார் தலைமறைவான கல்குவாரி உரிமையாளர் மற்றும் அவரது மகனை வலைவீசி தேடி வருகின்றனர்.