இன்று விஜயகாந்தின் 70தாவது பிறந்தநாள்(Vijayakanth Birthday). சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்த விஜயகாந்த் பின்னர் அரசியலிலும் தனக்கென தனி முத்திரை பதித்தார். தற்போது உடல்நிலை பிரச்சினை காரணமாக அரசியலில் இருந்தும், சினிமாவில் இருந்தும் சற்று தள்ளியே இருந்தாலும் தமிழ் சினிமா உலகத்துக்கும், தமிழ் சினிமா கலைஞர்களுக்கும் பல நல்ல விஷயங்களை அவர் செய்துள்ளார். தமிழ் சினிமாவில் மண்வாசம், அதிரடி ஆக்‌ஷன், சிவந்த கண்களுடன் பொறிபறக்க வசனங்கள் என விஜயகாந்த் ’சி’ செண்டர்களுக்கான சூப்பர் ஸ்டாரானார். காங்கிரஸின் மதுரை மாவட்ட நிர்வாகியான அழகரின் மகனான விஜயராஜ்தான் பின்னாளில் விஜயகாந்த்தும் ஆனார். அவரைப்பற்றி சுவாரஸ்யமான சில தகவல்கள்..




கேப்டன்..


விஜயகாந்தை கேப்டன் என சினிமா உலகமும், ரசிகர்களும் அழைக்கிறார்கள். இந்த செல்லப்பெயர் அவருக்கு தொடக்கத்தில் இருந்தே கிடைக்கவில்லை. 100வது படமான கேப்டன் பிரபாகரன் படத்துக்கு பிறகே விஜயகாந்தை கேப்டன் என அழைக்கத்தொடங்கினர். கேப்டன் பிரபாகரன் இயக்குநர் செல்வமணி தொடங்கிய செல்லப்பெயர் தற்போது விஜயகாந்தின் நிரந்த செல்லப்பெயரானது.


இரண்டு சூப்பர் ஸ்டார்ஸ்.. 


விஜயகாந்த் நடித்த சட்டம் ஒரு இருட்டறை படத்தின் ரீமேக்கில் தமிழ் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான ரஜினி மற்றும் சிரஞ்சீவி நடித்தனர். அந்த கானூனில் ரஜினியும், சட்டனிக்கி கல்லு லெவ்வில் சிரஞ்சீவியும் நடித்தனர்




நடிகர் சங்கம்..


கோலிவுட்டில் நடிகர் சங்கம் என்பது நஷ்டத்தில் இயங்கும் சங்கமாகவே இருந்து வந்தது. விஜயகாந்த் பொறுப்பேற்றே நடிகர் சங்கத்தை லாபத்தை நோக்கி நகர்த்தினார். சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளின் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நிதி திரட்டினார்.


போலீஸ்னா அவருதான்.. 


விஜயகாந்த் இதுவரை 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதில் 20 படங்கள் போலீஸ் அதிகாரி கேரக்டர்கள். வேறு எந்த நடிகர்களும் இத்தனை படங்கள் போலீசாக நடிக்கவில்லை.


வடிவேலுக்கு ஆதரவு..


சினிமாவில் ஜொலிக்க வடிவேலு போராடிக்கொண்டிருந்த நேரத்தில் கைகொடுத்து உதவியவர் விஜயகாந்த். சின்ன கவுண்டர் படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் அவரின் சினிமா வாழ்க்கைக்கு பெரிய உதவியாக இருந்தது.




பிரபுதேவா டான்ஸ்..


பரதன் படத்தில் பிரபுதேவா நடன இயக்குநராக இருக்க அவரிடம் விஜயகாந்த் பணியாற்றினார்


நடிகர் விஜய்க்காக..


விஜயின் நடிப்பை கவனிக்க வைத்த செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்த் நடித்திருந்தார். அப்படத்துக்காக அவர் சம்பளம் எதையுமே வாங்கவில்லை.




100வது படம் சில்வர் ஜூப்ளி..


தன்னுடைய 100வது படமான கேப்டன் பிரபாகரன் படம் சில்வர் ஜூப்ளி வெற்றி பெற்றது. எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதாவுக்கு பிறகு 100வது படத்தில் சில்வர் ஜூப்ளியை ருசித்தவர் விஜயகாந்த் மட்டுமே.


ஒரே படம்..


1986ம் ஆண்டு வெளியான மனக்கணக்கு படத்தில் கமல்ஹாசன் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பார். விஜயகாந்துடன் கமல் நடித்த ஒரே திரைப்படம் அதுதான்


தமிழில் 3டி..


தற்போது 3டி என்பது மிகவும் சாதரணமான ஒன்றுதான் என்றாலும் அதனை தமிழில் அறிமுகம் செய்தவர் விஜயகாந்த்தான். அவர் நடித்த அன்னைபூமி திரைப்படம்தான் அது. 


ALSO READ | Liger Movie Review: மனோகரா... எம்.குமரன் S/O மகாலட்சுமி... அப்டேட் வெர்சனா லைகர்? படம் முடிந்ததும் முதல் விமர்சனம்!