தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன.


இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இடப்பங்கீடு தொடர்பாக அதிமுக-பாஜக இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை சுமார் மூன்றரை மணி நேரம் நீடித்தது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு  பாஜகவின் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும்  ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது. கூட்டணியில் நிறையே விஷயங்கள் உள்ளது. தற்போது வரை பேச்சுவார்த்தை சிறப்பாக நடைபெற்றுள்ளது. நகர்ப்புற இடங்களில் நிறையே பகுதிகளில் பாஜக வலுவாக உள்ளது. அந்த கருத்துகளை நாங்கள் முன்வைத்துள்ளோம். அவர்களும் அதை பரிசீலித்து விரைவில் இடப்பங்கீடு தொடர்பாக தெரிவிக்கப்படும்.


முரசொலி பத்திரிகையில் தமிழக ஆளுநர் தொடர்பாக எழுதப்பட்டுள்ள கட்டுரை என்பது அவதூறுதான். அவதூறுக்கும் விமர்சனத்திற்கு ஒரு சிறிய கோடுதான் உள்ளது. அதை அவர்கள் இன்று தாண்டிவிட்டார்கள். இந்திய காவல்துறை பணியில் இருந்துவிட்டு நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக பணியாற்றி வந்துள்ளார். அவர் தொடர்பாக தற்போது எழுதியிருப்பது அவதூறுதான்” எனத் தெரிவித்துள்ளார். 




1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு  தேர்தல் நடைபெற உள்ளது. ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பதவிகளுக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. அதில் கடைசி ஒரு மணி நேரம் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்கள் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டிய தொகையின் விவரம்:


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்கள் செலுத்த வேண்டிய வைப்புத் தொகை:


பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவி- 500 ரூபாய் 


நகராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவி-1000 ரூபாய்


மாநகராட்சி உறுப்பினர்கள் பதவி-2000 ரூபாய்


இதர வகுப்புகளை சேர்ந்த நபர்கள் செலுத்த வேண்டிய வைப்புத் தொகை :


பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவி- 1000 ரூபாய் 


நகராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவி-2000 ரூபாய்


மாநகராட்சி உறுப்பினர்கள் பதவி-4000 ரூபாய்


இந்த வைப்புத் தொகையை செலுத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க: இ-சேவை மையங்கள் மூலம் 23 சான்றிதழ்களைப் பெறலாம்: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு விவரம்..