சென்னை, திருவொற்றியூரில் சாலை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டவர்களை தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் திருவொற்றியூர் தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி. சங்கர் மீது சென்னை மாநகராட்சி சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி மின்னஞ்சல் (இ-மெயில்) மூலமாக காவல் ஆணையருக்கு புகார் அனுப்பியுள்ளார்.
திருவொற்றியூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகித்து வருபவர் தி.மு.க.வைச் சேர்ந்த கே.பி. சங்கர். முன்னாள் அமைச்சரான மறைந்த கே.பி.பி.சாமியின் சகோதரர். இந்த நிலையில், கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு திருவொற்றியூர் பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்துள்ளது.
சாலை அமைக்கும் பணிகளில் மாநகராட்சி பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகளும், பணியாளர்களும் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் எம்.எல்.ஏ. சங்கர் ஆய்வுப்பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, எம்.எல்.ஏ. சங்கர் தரப்பினருக்கும், மாநகராட்சி தரப்பினருக்கும் இடையே சாலை அமைக்கும் பணிதொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், இரு தரப்பினருக்கம் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது, எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் மாநகராட்சி பொறியாளர் உள்பட மாநகராட்சி பணியாளர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்திற்கு எதிர்க்கட்சிகள் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.சங்கர் அவர் வகித்து வரும் திருவொற்றியூர் மேற்குப் பகுதிச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்திருந்தார்.
இதுதொடர்பாக. எம்.எல்.ஏ. சங்கர் தரப்பில் அளித்த விளக்கத்தில், முதல்வர் அறிவுறுத்தியபடி மாநகராட்சி பணியாளர்கள் பழைய சாலையை அகற்றாமல், புதிய சாலையை பழைய சாலை மீது அமைத்ததாலும், அதை எம்,எல்.ஏ. சங்கர் தட்டிக்கேட்டார் என்றும், எம்.எல்.ஏ சங்கர் அதிகாரிகளை அடித்ததாக கூறப்படும் தகவல் பொய்யானது என்றும் விளக்கம் அளித்தனர்.
ஆனாலும், எம்.எல்.ஏ. சங்கரின் பகுதிச்செயலாளர் பொறுப்பை கட்சித் தலைமை பறித்துள்ளது. மேலும், அவர் மீது மாநகராட்சி சார்பில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்