கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் பகுதிகளைத் தவிர மற்ற 11 மாவட்டங்களில் அரசு மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அந்த மாவட்டங்களில் வசிக்கும் மது அருந்துவோர் குறிப்பாக குடிநோயாளிகள் எல்லைதாண்டிச் சென்று குடித்துவிட்டு திரும்புகின்றனர். அப்படி போகவர முடியாதவர்களுக்கு வாங்கிவந்து தருபவர்களும் குறுகிய கால வியாபாரமாக இதைச் செய்பவர்களும் எல்லைதாண்டி மதுவாங்கிச் செல்கின்றனர். 


உண்மையிலேயே உரிய காரணங்கள் இருந்தாலும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ-பதிவு, நுழைவிடச் சோதனைகள் என கெடுபிடிகள் ஒரு பக்கம் இருந்தாலும், மது குடிப்பவர்களும் வாங்கித்தருபவர்களும் தடைகளைத் தாண்டி எப்படியாவது தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்கிறார்கள். 


கொரோனா பாதிப்பு பரவலாகக் குறைந்தபோதும், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் இன்னும் கட்டுப்படுவதாகத் தெரியவில்லை. இதில், மேற்கு மண்டலத்தில் நீலகிரியிலிருந்து திருப்பூர்வரை அடுத்தடுத்து ஊரடங்கு இருப்பதால், திண்டுக்கல் மாவட்டம் பழனி, ஒட்டன்சத்திரம்வரை சென்று மது குடிக்கிறவர்களும் இருக்கிறார்கள். சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல் மாவட்ட ’குடி’மகன்களுக்கு அக்கம்பக்கம் சற்றே கூடுதல் வாய்ப்புகள் இருக்கின்றன. 

Also Read: சென்னையில் 5,839 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது


காவிரி டெல்டாவைப் பொறுத்தவரை கணிசமான மதுப்பிரியர்கள் புதுக்கோட்டை மாவட்டத்துக்கே செல்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளான கறம்பக்குடி, நாயக்கர்பட்டி, இரெகுநாதபுரம், கைகாட்டி ஆகிய ஊர்களில் உள்ள அரசு மதுக்கடைகளில் குவிகின்றனர். 


பெரும் கும்பலாக அங்கு மதுவாங்கத் திரள்பவர்களைக் கட்டுப்படுத்துவது குதிரைக்கொம்பாகவே இருக்கிறது. இதில் கறம்பக்குடிக்கு மதுவாங்கச் சென்ற இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஒருவர் இறந்தேபோனார். மூன்று பேர் காயமடைந்து புதுக்கோட்டை மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 


இந்த நிலையில் இது ஒரு தனி பிரச்னையாக உருவெடுப்பதைக் கட்டுப்படுத்த, கடந்த ஆண்டில் செய்யப்பட்டதைப் போல, ஆதார் அட்டையைக் காண்பித்தால் மட்டுமே மது வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவுசெய்திருக்கிறது. அந்த மாவட்ட எல்லைக்கு உள்பட்டவராக இல்லாவிட்டால், மது வழங்க முடியாதென திருப்பியனுப்ப கடைக்காரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதிலிருந்து தப்பிக்க மதுப்பிரியர்களுக்கு இப்போதைக்கு எந்த வழியும் இல்லை என்றே தெரிகிறது.