Tamil Nadu Coronavirus LIVE News : இன்று ஒரேநாளில் 10,448 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று..!

தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 16 Jun 2021 07:57 PM
இன்று ஒரேநாளில் 10,448 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று..!

இன்று ஒரேநாளில் 10,448 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று..!

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வைப்புநிதி திட்டம்- முதல்வர் தொடங்கி வைத்தார்.

கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 5 இலட்சம் வழங்கும் வைப்புநிதி திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார் 

மூன்றாவது அலையை எதிர்க்கத் தயாராகும் டெல்லி அரசு

கொரோனா மூன்றாவது அலையைக் கட்டுபடுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5,000 இளைஞர்கள் "சுகாதார உதவியாளர்களாக" பயிற்றுவிக்கப்படுவார்கள் என்று அம்மாநில முதல்வர்  அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.   

Chennai Covid-19 Vaccination: 5,839 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 5,839 மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி டோஸ்கள்  நிர்வகிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

சென்னை மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்

சென்னையில் 7464 பேர் தற்போது கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பேரு வருகின்றனர். இதில், 1474 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும், 2024 பேர் மருத்துவ ஆக்சிஜன் உதவி கொண்ட படுக்கையிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதாவது, பாதிக்கப்பட்டவர்க்ளில்  47% நபர்கள் நிமோனியா போன்ற தீவிர கொரோனாத் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். கோயம்பத்தூர் மாவட்டத்தில் தீவிர பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை  24 சதவிகிதமாக உள்ளது     


சென்னையின் தற்போது வரை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7876 ஆக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.          


தடுப்பூசியால் பலியாகியுள்ளனர் என்ற சொல்லாடல் தவறானது - மத்திய அரசு

தடுப்பூசிக்குப் பிறகு ஏற்படும் உயிரிழப்புகள் அல்லது மருத்துவமனைகளில் அனுமதி ஆகியவை தடுப்பூசியினால் ஏற்பட்டது என்று உடனடியாகக் கருத முடியாது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்தது. 


இதுதொடர்பாக இந்திய பத்திரிக்கை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், " தடுப்பு மருந்துக்குப்பின் ஏற்படும் பாதக விளைவுகளின் எண்ணிக்கை அதிகரித்து, தடுப்பூசியை செலுத்திக் கொண்ட பிறகு சில நோயாளிகள் 'பலியாகியிருப்பதாக' ஒரு சில ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. ஜனவரி 16 முதல் ஜூன் 7-ஆம் தேதி வரை மொத்தம் 23.5 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில், ஊடக செய்திகளின்படி தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொண்ட பிறகு நேரிட்ட 488 உயிரிழப்புகள், கொவிட் தொற்றுக்குப் பிந்தைய பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகள், முழுமையற்ற மற்றும் விஷயம் பற்றி போதிய புரிதல் இல்லாததன் அடிப்படையில் வெளியிடப்பட்டிருப்பதாக தெளிவுபடுத்தப்படுகிறது. ‘பலியாகியுள்ளனர்’ என்னும் வார்த்தை உயிரிழப்புகளை, அதாவது தடுப்பூசியினால் உயிரிழந்தனர் என்பதைக் குறிப்பதாகும்.


23.5 கோடி டோஸ்கள் வழங்கப்பட்ட நிலையில், நம் நாட்டில் தடுப்பூசிக்குப் பிறகு நேரிட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 0.0002% மட்டுமே. இது மக்கள்தொகையில் எதிர்பார்க்கப்பட்ட உயிரிழப்பு வீதத்தை விட மிகவும் குறைவு. மக்கள்தொகையில் ஒரு குறிப்பிட்ட விதத்தில் உயிரிழப்புகள் ஏற்படும். மாதிரிப் பதிவு முறையின்படி சராசரியாக 1000 பேரில் ஏற்படும் உயிரிழப்பின் வீதம் 2017-ஆம் ஆண்டில் வருடத்திற்கு 1000 நபர்களில் 6.3 ஆக உள்ளது. கோவிட்-19 நோயினால் உயிரிழப்பவர்களின் வீதம் 1%க்கும் அதிகமானது. தடுப்பூசியினால் இதுபோன்ற உயிரிழப்புகளைத் தடுக்க முடியும். எனவே நோயினால் நேரிடும் உயிரிழப்புகளின் அபாயத்தை விட தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட பிறகு நேரக்கூடும் உயிரிழப்புகளின் அபாயம் மிகவும் குறைவு" என்று தெரிவித்தது.  


 

நோவாக்ஸ் தடுப்பூசி மிகச்சிறந்த பலனை அளிக்கிறது - நித்தி ஆயோக்

கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக நோவாக்ஸ் தடுப்பூசி மிகச்சிறந்த பலனை அளிக்கிறது என்று நித்தி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி கே பால் தெரிவித்தார். இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது தடுப்பூசி இதுவாகும். முன்னதாக, அஸ்ட்ரா ஜெனிகா /ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலிருந்து தொழில்நுட்ப பரிமாற்றம் மூலம்  ‘கோவிஷீல்டு’  தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது.  'நோவாக்ஸ்' என்ற அமெரிக்கா நிறுவனத்துடன் இனைந்து தற்போது இரண்டாவது தடுப்பூசியை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.      

உருமாறிய வைரஸுக்கு எதிராக தடுப்பூசி சிறப்பாக செயல்படுகிறது- இங்கிலாந்து ஆய்வில் தகவல்

 


கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசியின் செயல்திறன் குறித்த, இங்கிலாந்து அரசின் Public Health England சுகாதாரத் துறையின் சமீபத்திய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 


"பிஃபிசர் - பயோஎன்டெக் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுத்துக் கொண்டவர்களில், 14 நாட்களுக்குப் பிறகு, இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய பி.1.617 தொற்றுக்கு எதிராக 96% சதவிகித பாதுகாப்பையும், இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட கொரோனா பி.1.1.7 தொற்றுக்கு எதிராக 95%  பாதுகாப்பையும் பெறுகின்றனர். அஸ்ட்ரா ஜெனிகா /ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூச்சி(இந்தியாவின் கோவிஷீல்டு)  இரண்டு டோஸ் போட்டுக் கொண்டவர்களில், பி.1.617 தொற்றுக்கு எதிராக 92 சதவீத பாதுக்காப்பையும், பி.1.1.7 தொற்றுக்கு எதிராக 86% பாதுகாப்பையும் பெறுகின்றனர்.


அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி முதல் டோஸ் மட்டும் எடுத்துக் எடுத்துக் கொண்டவர்களில், பி.1.617 தொற்றுக்கு எதிராக 71 சதவிகித பாதுகாப்பையும், பி.1.1.7 வைரஸ் தொற்றுக்கு எதிராக 76 சதவிகித பாதுகாப்பையும் பெறுகின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டது.    


 


1.13 லட்சம் கொரோனா சாவுகள் மறைப்பு பற்றி விசாரணைக்கு ஆணையிடுங்கள் - ராமதாஸ் கோரிக்கை

தமிழ்நாட்டில் 1.13 லட்சம் கொரோனா சாவுகள் மறைப்பு  பற்றி விசாரணைக்கு ஆணையிடுங்கள் என்று  பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.  


இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், " தமிழ்நாட்டில்  கொரோனா வைரஸ் உயிரிழப்புகளின் எண்ணிக்கை திட்டமிட்டு மறைக்கப்படுவதாக பா.ம.க. குற்றஞ்சாட்டி வந்த நிலையில், அதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக  1.13 லட்சம் கொரோனா உயிரிழப்புகள் மறைக்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. குடும்பத் தலைவர்கள் பலரை கொரோனா பலி வாங்கி விட்ட நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு கிடைக்கக்கூடிய உதவிகளையும் தடுக்கும் வகையில் உயிரிழப்புகளை மறைப்பது கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்தார். 

இடைவெளியை 12-16 வாரங்களாக நீட்டிப்பதற்கான  எந்த தரவுகளும் இல்லை- இந்திய விஞ்ஞானிகள்

நோய் எதிர்ப்புத் தன்மைக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ள இந்திய விஞ்ஞானிகள் (National Technical Advisory Group on Immunization (NTAGI)), கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸுக்கும் இரண்டாவது டோஸுக்குமான இடைவெளியை 12-16 வாரங்களாக நீட்டிப்பதற்கான  எந்த தரவுகளும் இல்லை என்ற தெரிவித்துள்ளனர்.   


முன்னதாக, கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸுக்கும் இரண்டாவது டோஸுக்குமான இடைவெளி 12 முதல் 16 வாரங்களாக நீட்டித்து டாக்டர் என் கே அரோரா தலைமையிலான நிபுணர் குழு (COVID Working Group) பரிந்துரை செய்ததாகவும், இதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதாகவும், சுகாதாராத் துறை கடந்த மே 16ம் விளக்கம் அளித்தது.

கோயம்பத்தூர் மாவட்டத்தில் தடுப்பூசி போடப்படுவது பற்றிய விபரங்கள்



 



Caption

உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து மாநிலங்களுக்கு எச்சரிக்கை அளித்தோம் - மத்திய அரசு விளக்கம்

நாட்டில் உருமாறிய கொரோனா மாதிரிகளை கண்டறிந்து, மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுப்பதில்  பின்னடைவு உள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. 


இதுதொடர்பான வெளியிட்ட செய்திக் குறிப்பில், " இந்தியாவில் கொரோனாவின் வேறுபட்ட மாதிரிகளை கண்டறிய, மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகத்தால் இன்சாகாக் அமைப்பு கடந்தாண்டு டிசம்பர் 25ம் தேதி அமைக்கப்பட்டது. ஆரம்ப கட்டத்தில், வேறுபட்ட கொரோனா மாதிரிகளை கொண்டு வரும் சர்வதேச பயணிகளை அடையாளம் காணவும், மக்களிடம் ஏற்கனவே உள்ள வேறுபட்ட கொரோனா மாதிரிகளை கண்டறியவும், இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2 விதமான உத்திகள் பின்பற்றப்பட்டன.


குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  தினசரி பாதிப்பு 10,000 முதல் 15,000 வரை உள்ள மாநிலங்களில் இருந்து 5 சதவீத பாதிப்புகளின் மாதிரிகள்  ஆய்வு செய்யப்பட்டன. இதில் சர்வதேச பயணிகள் மூலம் இங்கிலாந்து வகை கொரோனா மாதிரி பரவியதும் நிருபணம் ஆனது. இது தொடர்பான தகவல்களும் மாநிலங்களுன் சரியான நேரத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டன" என்று விளக்கமளித்தது.  

Background

தமிழ்நாட்டில் கடந்த 24  மணி நேரத்தில் புதிதாக 11,805 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டது. தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,25,215  ஆக சரிந்துள்ளது. 


கொரோனா காலத்தில் தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்தும், மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நாளை (வியாழக்கிழமை) காலை 11.00 மணிக்கு மாநிலம் தழுவிய நிலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.