தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள 5.68 கோடி பேர் தகுதியான நபர்கள் உள்ள நிலையில், இன்னும் 10 கோடிக்கு மேல் தடுப்பூசி தேவை உள்ளது என சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பரமணியன் தெரிவித்தார். கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பரமணியன் இன்று மாலை ஆய்வு செய்த பின், "கொரோனாவில் அதிகளவில் மக்கள் பாதிக்காமல் இருக்க மிக முக்கிய காரணியாக இருப்பது தடுப்பூசி தான். தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள 5.68 கோடி பேர் தகுதியான நபர்கள் உள்ளனர்.  இவர்கள் அனைவருக்கும் 11கோடியே 36 லட்சம் அளவில் ஊசி போட வேண்டும்.  இதுவரை 1 கோடியே 6 லட்சத்து 65 ஆயிரத்து 464 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் 10 கோடிக்கு மேல் தடுப்பூசி கிடைத்தால் தான் ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி முழுமையாக செலுத்த முடியும். இதற்கு மத்திய அரசிடம் ஊசியை கேட்டு பெறுவோம்.

 

அதேசமயம், வட மாநிலங்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பரிசு பொருட்கள் வழங்கி ஊசிசெலுத்த வைக்கிறார்கள். பாகிஸ்தான் போன்ற நாடுகளில் தடுப்பூசி செலுத்தாத நபர்களுக்கு அபாரதம்,தண்டனை போன்று அச்சுறுத்தி ஊசிப்போட வைக்கின்றனர். ஆனால், தமிழகத்தில் முதல்வர் ஏற்படுத்திய விழிப்புணர்வால், தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வமாக, அதிகாலை முதலே டோக்கன் வாங்க வரிசையில் நின்று, தடுப்பூசி செலுத்திக் கொள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழகம் முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணிகள் காலியாக இருந்தது. 2 ஆயிரம் மருத்துவர்கள்,6 ஆயிரம் செவிலியர்கள் மற்றும் 3200 மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அப்படியாக பணி நியமனம் அரசு நேரடியாக செய்து வருகிறது.

 

கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையை பொறுத்தவரை, கொரோனா பேரிடர் காலத்தில், 400 படுக்கைகளை அமைக்கப்பட்டுள்ளது. அதையும் தாண்டி, கூடுதலாக 200 படுக்கைகள் அமைத்து பொது மருத்துவத்துக்கும் முக்கியத்துவம் அளித்து முன்மாதிரி மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. தினமும் 6 பேருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகபேறும் சிறப்பாக நடந்துள்ளது. புதியதாக 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டிடம் கட்டும் பணி முடியும் தருவாயில் உள்ளது. இன்னும் 2 கோடி ரூபாய் அளவில் மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட வேண்டியது உள்ளது. அந்த பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு, முதல்வரால் திறக்கப்படும்" என்றார்.

 

ஆய்வின்போது சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், அரசு கொறடா கோவி.செழியன், எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன், சுகாதார துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், திமுக மாவட்ட செயலாளர் சு.கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். ஆய்வின் போது சுகாதார துறை அமைச்சரிடம் கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு என்னென்ன வசதிகள் தேவை என்ற கோரிக்கை மனுவினை எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் வழங்கினார். 

 

முன்னதாக இன்று காலை டெல்டா மாவட்ட பாசனத்துக்கு கல்லணை திறந்து வைக்கும் நிகழ்வில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்படும் பகுதிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து ஆய்வு பணி மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.