தமிழ்நாடு மருத்துவமனைகளில் பதிவு செய்யப்பட்ட கொரோனா மரணங்கள் உண்மை எண்ணிக்கையை விடக் குறைத்துக் காண்பிக்கப்பட்டிருப்பதாக அண்மையில் அறப்போர் இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. தமிழ்நாட்டில் மதுரை, திருச்சி, கோவை, கரூர், திருப்பூர் மற்றும் வேலூர் என 6 மாவட்ட மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை அரசு செய்திக்குறிப்பில் உள்ளதை விட 13.7 மடங்கு அதிகம் உள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. 




இதுகுறித்த அறப்போர் இயக்கத்தின் செய்திக்குறிப்பில், "இந்த மருத்துவமனைகளில் ஏப்ரல் 2021-ஆம் ஆண்டில், இறப்பு எண்ணிக்கை 3009 ஆகவும் மே 2021-ஆம் ஆண்டில் 8690 ஆகவும் உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்கள் மற்றும் சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மற்றும் மே 2021ல் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உயர்ந்துள்ளது என்பதை 6  மருத்துவமனைகளின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மே மாதத்தின் இறப்பு எண்ணிக்கை கடந்த மாதங்கள் மற்றும் ஆண்டுகளை விட 4 மடங்கு அதிகமாக உள்ளது.


ஏப்ரல் மற்றும் மே 2021ல் இந்த 6 மருத்துவமனைகளில் இறப்பு எண்ணிக்கை 11699. ஏப்ரல் மற்றும் மே 2019 எண்ணிக்கையை விட 7262 அதிகமாகவும் ஏப்ரல் மற்றும் மே 2020 எண்ணிக்கையை விட 8438 அதிகமாகவும் உள்ளது. எனவே இந்த மருத்துவமனைகளில் நிகழ்ந்திருக்கக் கூடிய கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 7262 முதல் 8438 வரை இருக்கக்கூடும். அரசு செய்தி அறிக்கையில் இந்த மருத்துவமனைகளில், ஏப்ரல் மற்றும் மே 2021ல் நிகழ்ந்ததாக வெளியிடப்பட்ட இறப்பு எண்ணிக்கை 863 மட்டுமே.எனவே இந்த 6 மருத்துவமனைகளின் இறப்பு வீதம், சுகாதாரத்துறை வெளியிட்ட எண்ணிக்கையை விட 13.7 மடங்கு அதிகமாக உள்ளது.மேலும், ICMR மற்றும் WHO அறிவுறுத்தலின் படி இறந்ததற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டிய Medical Certification for cause of death வழங்கப்படுவதில்லை’ எனக் கூறப்பட்டிருந்தது.


இதற்கு என்ன காரணம்?





இதுகுறித்துக் கூடுதல் விளக்கமளித்துள்ள திமுக மக்களவை எம்.பி. மருத்துவர் செந்தில்குமார், ‘ஐ.சி.எம்.ஆர். கொடுத்த ஒழுங்குமுறைகளின்படிதான் இந்த மரணங்களின் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களின் ஒழுங்குமுறையின் கீழ் அல்லாமல் புள்ளிவிவரங்களை எடுத்தால் அறப்போர் வெளியிட்டிருக்கும் எண்ணிக்கை வரும்.ஐ.சி.எம்.ஆர்.ன் ஒழுங்குமுறைகளில் எங்களுக்கே உடன்பாடில்லை.கொரோனாவால் இறந்த பலபேரின் குடும்பத்துக்குக் கிடைக்கக்கூடிய பலன் எதுவும் இதனால் கிடைக்காமல் போகிறது. இதற்கு முழுக்காரணம் ஐ.சி.எம்.ஆர். மட்டும்தான்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.   


இதனை எப்படிச் சரிசெய்யப்போகிறது அரசு?




இந்த எண்ணிக்கையில் உள்ள முரண்கள் குறித்து விளக்கமளித்த சுகாதாரச் செயலர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், “அறப்போர் இயக்கம் குறிப்பிட்டுள்ள பிரச்சினை இறப்புச் சான்றிதழ் தொடர்பானதல்ல, மரணத்திற்கான மருத்துவ சான்றிதழ் தொடர்பானது. ஏனெனில் சட்டரீதியான இறப்பு சான்றிதழ்கள் மரணத்திற்கான காரணத்தைக் கொண்டிருக்கவில்லை. அவரது புகாரின் அடிப்படையில் மருத்துவ சான்றிதழ், அறப்போரின் தரவு மற்றும் அறிக்கையுடன் ஓப்பீடு செய்யப்பட்டு , மேலும் உண்மையின் அடிப்படையில் ஏதேனும் சமரசம் தேவைப்பட்டால் மருத்துவமனைகள் இலவசமாகச் செய்யும்” எனக் கூறியுள்ளார்.

Also Read: போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவை சென்னை அழைத்து வர ஏற்பாடு!