பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் தமிழத்தில் உள்ள நிதி நிலையை சீர் செய்யவும் முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு அமைக்கப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்த முதலமைச்சரின் பொருளாதார ஆலோசனை குழுவில் ரகுராம் ராஜன், எஸ்தர் டஃப்லோ, ஜீன் ட்ரெஸ், அரவிந்த் சுப்ரமணியம், எஸ் நாராயணன் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
இவர்கள் அனைவரும் தொடர்ந்து கொரோனா காலத்தில் இந்திய அரசின் கொள்கைகள் தொடர்பாக விமர்சித்து வந்தனர். ரகுராம் ராஜன், “கொரோனா பெருந்தொற்று காலத்தை இந்திய அரசு சரியாக கையாளவில்லை” என்று ஒரு நேர்காணலில் தெரிவித்தார். அதேபோல எஸ்தர் ட்ஃப்லோ, “கொரோனா ஊரடங்கு காரணத்தால் பலர் மீண்டும் வறுமை கோட்டிற்கு கீழே சென்றுள்ளனர்” எனக் கூறி வந்தார்.
மேலும் முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியம் மக்களிடம் குறைந்தபட்ச ஊதிய உத்தரவாத திட்டம் மூலம் பணம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பாக அவர் 2016-17 பொருளாதார ஆய்வறிக்கையிலும் எழுதியிருந்தார். ஜீன் ட்ரெஸூம் மக்களிடம் பணத்தை கொடுக்க வேண்டும் என்றே அவருடைய கருத்துகளில் வலியுறுத்தி வந்தார். அத்துடன் அமெரிக்கா முறையில் சுகாதார காப்பீட்டு முறையை மாற்றியமைக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்தச் சூழலில் தமிழ்நாடு அரசின் புதிய பொருளாதார ஆலோசனைக் குழு தொடர்பாக பொருளாதார அறிஞர் ஒருவர் ‘மணிகன்ட்ரோல்’ தளத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் சில கருத்துகளை முன்வைத்துள்ளார்.
பொருளாதார வல்லுநர்களின் ஆலோசனை:
இது குறித்து அவர், “சிறப்பான பொருளாதார வல்லுநர்களை அறிவிப்பதன் மூலம் சர்வதேச அளவில் தமிழ்நாடு வெளிச்சம் பெரும். அத்துடன் சில அந்நிய முதலீட்டாளர்களை ஈர்க்க முடியும். ஆனால் அவர்களின் ஆலோசனைகளுக்கு அரசியல்வாதிகள் செவி சாய்ப்பார்களா என்பது பெரிய கேள்வியாக தான் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாட்டிற்கு முன்பாக கடந்த 2016ஆம் ஆண்டு கேரளாவின் பினராயி விஜயன் அரசு தற்போதைய ஐஎம்.எஃப் பொருளாதார ஆலோசகர் கீதா கோபிநாத்தை ஆலோசனை வழங்குவதற்காக நியமித்தது.
ஆனால் அவர் கூறிய கருத்துகளை கேரள அரசு ஏற்கவில்லை. மேலும் அவரை போன்ற அமெரிக்க கொள்கை சார்பு உடைய பொருளாதார ஆலோசகரை நியமித்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைக்கு எதிரானது என்று பல குரல் எழுந்தன. கேரளாவை போல் தமிழ்நாடு இல்லை என்றாலும் தமிழ்நாடு அரசியல்வாதிகள் எவ்வாறு அவர்களின் ஆலோசனைகளை ஏற்று கொள்வார்கள் என்று பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்” எனக் கூறியுள்ளார்.
நிதி பற்றாகுறை:
இதற்கு அவர், “தமிழ்நாடு அரசு ஏற்கெனவே நிதி பற்றாகுறையில் உள்ளது. இந்தச் சூழலில் ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் குறைத்துள்ளார். மேலும் பால் விலையையும் லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்துள்ளார். இவை தவிர ரேஷன் அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் வரை தரும் திட்டத்தையும் அறிவித்துள்ளார். இந்தச் சூழலில் முதல்வரின் ஆலோசனைக் குழுவில் அமைந்துள்ள அனைவரும் மக்களிடம் அதிகளவில் பணத்தை கொடுக்க வேண்டும் என்ற கொள்கையை கொண்டவர்கள். ஆகவே இவர்கள் அப்படி ஒரு ஆலோசனை வழங்கினால் அதையும் செய்ய தமிழக அரசு எப்படி நிதியை திரட்டும்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்தாண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.7 சதவிகிதம் வரை குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த இக்கடான சூழலில் இவர்களின் ஆலோசனை எப்படி இருக்கும் அதை எவ்வாறு தமிழ்நாடு அரசு அமல்படுத்தும் என்பது குறித்து அறிய பலரும் ஆவலுடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ’புத்துயிர் பெறும் உழவர் சந்தைகள்’ உழவர் சந்தைகள் சாதித்தது என்ன..?