தமிழ்நாட்டின் 16 வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் பங்கேற்று உரையாற்றிய ஆளுநர் தமிழகம் முழுவதும் உழவர் சந்தைகள் அமைக்கப்படும் என்றார்.
“ முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கப்படும். தமிழகம் முழுவதும் உழவர் சந்தைகள் மீண்டும் அமைக்கப்படும். விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதற்காக, அரசின் மேற்பார்வையில் கிராமப்புறச் சந்தைகள் உருவாக்கப்படும். கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில் வாகனங்கள் மூலம் மக்களுக்கு அவர்கள் வீட்டிலேயே காய்கறிகளும் பழங்களும் விற்பனை செய்யப்பட்டன. இந்தத்திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு தொடர்ந்து செயல்படும்” என்று ஆளுநர் பேசினார்.
எப்படி பிறந்தது உழவர் சந்தைத்திட்டம்?
1998 ஆம் ஆண்டு ‘விவசாய உற்பத்திச் சந்தைப்படுத்துதல் வரி மீளாய்வுக் குழு’ என்ற குழுவை அப்போதைய தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி அமைத்தார். அந்தக் குழுவின் உறுப்பினராக தமிழ்நாடு வர்த்தக மற்றும் தொழில்துறைகளின் சங்கத்தின் அப்போதைய தலைவர் எஸ். ரத்தினவேலு இருந்தார். அவர் விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைப்பொருட்களை எவ்வாறு விற்பனை செய்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார்.
அந்த ஆய்வின் முடிவில், சண்டிகர் மாநிலத்தில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைப்பொருட்களை ‘அப்னே மண்டி’ என்ற பெயரில் தங்களின் உழுவைகளில் அமர்ந்து கொண்டே நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்வதை கருணாநிதியிடம் கொண்டு சென்றார். இதனைக்கேட்ட கருணாநிதி இவற்றை அடிப்படையாகக் கொண்ட அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அறிக்கை தன் கைக்கு கிடைத்த அன்றைய தினமே கருணாநிதி உழவர் சந்தைத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
மக்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்ற உழவர் சந்தைத்திட்டம்
1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதி, நேரு பிறந்த நாளன்று மதுரை அண்ணாநகரில் கலைஞர் கருணாநிதி
முதல் உழவர் சந்தை தொடங்கிவைத்தார். பிற இடங்களை காட்டிலும் உழவர் சந்தைகளில் விலை குறைவு என்பதால் இந்தத்திட்டம் மக்கள் மத்தியிலும், நுகர்வோர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உழவர் சந்தைகள் திறக்கப்பட்டன. 100 வது உழவர் சந்தையை சென்னை பல்லாவரத்தில் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
அதிகாலையிலேயே உழவர் சந்தைக்கு காய்கறிகளை கொண்டு வரும் விவசாயிகளுக்கு ஏதுவாக, அவர்களுக்கு தேவையான
போக்குவரத்து வசதி உருவாக்கப்பட்டது. அதில் சுமைக்கட்டணமும் ரத்துசெய்யப்பட்டது. விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு தனி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. நியாயமான விலையில் நல்ல காய்கறிகள் கிடைத்ததால் மக்கள் தொடர்ந்து உழவர் சந்தைகளுக்கு வர ஆரம்பித்தனர். இதனால் விவசாயிகளுக்கும் நல்ல இலாபம் கிடைத்தது. விளைவு, குடும்பம் குடும்பமாக விவசாயிகள் உழவர் சந்தைகளில் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்தனர். ஒரு கட்டத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் தனியார் காய்கறி கடைகளை உழவர் சந்தைகள் ஓரங்கட்டின.
பெரும் வர்த்தகமாக மாறிய உழவர் சந்தைகள்:
உழவர் சந்தை விலைகளை நாள்தோறும் நிர்ணயிக்க சிறப்பு குழு உருவாக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட விலைப் பட்டியல் உழவர் சந்தையின் 4 இடங்களில் வைக்கப்பட்டன. இதன் மூலம் விவசாயிகள் காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்பது தடுக்கப்பட்டது. உழவர் சந்தை ஒவ்வொன்றுக்கும் தனி அதிகாரி நியமிக்கப்பட்டு அவர்களுடன் 4 முதல் 10 ஊழியர்களின் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதன் மூலம் உழவர் சந்தை மிகப்பெரிய வர்த்தகமாக மாறியது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், உழவர் சந்தை திட்டத்தில் தோய்வு ஏற்பட்டாலும், அதன் பின்னர் ஆட்சியமைத்த திமுக உழவர் சந்தைகளில் தனிகவனம் செலுத்தி அதை மேலும் விரிவுப்படுத்தியது.
விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வர தேசிய அளவிலான மாநில முதல்வர்கள் மாநாடு டெல்லியில் நடந்தது. அப்போது துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் “ உழவர் சந்தைகள் வாயிலாக விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியும் என்றும் நாடு முழுவதும் உழவர் சந்தைகள் தொடங்கப்பட வேண்டும்” என்று பேசியது குறிப்பிடத்தக்கது.