கரூர் மாவட்டத்தில், தொடர்ந்து மின் வெட்டு ஏற்பட்டு வரும் நிலையில் இன்றும், நகரின் முக்கிய பகுதிகளான வடிவேல் நகர், பஜார் தெரு, சுக்காலியூர், காந்திகிராமம், தாந்தோன்றிமலை, பாகநத்தம், புலியூர், சோமூர், ஒத்தக்கடை, அர்த்தம் பட்டி, குழந்தை பட்டி, பஞ்சப்பட்டி, சிங்கம்பட்டி, கோரிபாளையம், அணைப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மின்சாரத்துறை அமைச்சரின் மாவட்டத்திலேயே இதுபோன்ற மின்வெட்டுகள் தொடர்வதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.




மின் தடை என்பது எப்போது ஏற்படும், எந்த நாளில் எவ்வளவு மணி நேரம் ஏற்படும் என்ற நிலையான தகவல் இல்லாததால் அப்பகுதியினர் குழம்பி தவித்து வருகின்றனர். மின் தடைக்கு பராமரிப்பு பணிகள்தான் காரணம் என்று கூறினாலும், வாரத்தில் பல நாட்களில் இப்படி பராமரிப்பு பணி என்று கூறி மின்சாரத்தை தடை செய்வதால், ஊரடங்கு காலத்தில் வீட்டில் உள்ளவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாவதாக புகார் தெரிவுத்துள்ளனர்.


இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கடந்த ஆட்சியில் பராமரிப்பு பணிகள் எதுவும் நடைபெறாத நிலையில், 19ஆம் தேதியில் இருந்து மாவட்டங்கள் தோறும் பராமரிப்பு பணிகள் பகுதி வாரியாக நடைபெறும் என்றும் இதனால் அந்த குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை மின் தடை ஏற்படும் என தெரிவித்திருந்தார். பின்னர், பராமரிப்பு பணி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும், அதோடு, மின் கம்பிகளில் அருகே இருக்கும் மரங்கள், செடிகொடிகள் வளர்ந்து கம்பிகளில் மோதும்போதும், அதனூடாக அணில்கள் செல்வதால் மின்சாரம் தடைபடுகிறது என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக ஆனது.




 


இதனால், அணிலோடு அமைச்சர் செந்தில்பாலாஜியை ஒப்பிட்டு பலரும் ட்வீட் போட்டிருந்தனர். அணிலால் மின் தடை ஏற்படுமா அல்லது ஏற்படாதா என்பது குறித்து பெரிய விவாதமே அங்கு சென்றுக்கொண்டிருக்கும் சூழலில், அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கடுமையாக மறுத்துள்ளார்.


ஆனால்,  உண்மையில் அணில்களால் உலகம் முழுவதும் மின்சாரம் தடை தடைப்பட்டு வருவது உண்மைதான் என்கிறார்கள் ஆய்வாளர். https://tamil.abplive.com/news/tamil-nadu/electrical-disruptions-power-outages-caused-by-squirrels-common-as-claimed-by-senthil-balaji-7084/amp


பல இடங்களில் ஒரே நேரத்தில் மின்சார தடை என்ற தொடர் குற்றச்சாட்டு வந்ததால், முதல்வரின் உத்தரவிற்கிணங்க பராமரிப்பு பணிகளை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி அளித்துள்ளார். ஊரடங்கு காலத்தில் அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும்போது மின்சாரத் தேவை என்பது மிகவும் தேவைப்படுவதால், சிறிது நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் கூட பொதுமக்கள் துடிதுடித்து போய்விடுகின்றனர். எனவே ஊரடங்கு முடியும் வரை பராமரிப்பு பணிகளை தொடங்க வேண்டாம் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.