தமிழ்நாட்டில் நகைக் கடன் பெற்றவர்களில் 35 லட்சம் பேருக்கு தள்ளுபடி கிடையாது எனவும் நகைக்கடன் பெற்ற 48,84,726 பேரில் 35,37,693 பேர் தள்ளுபடி பெற தகுதி அற்றவர்கள் எனவும் நேற்று கூட்டுறவுத்துறை பதிவாளர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் பெற்ற பயனர்கள் தள்ளுபடியாகும் என எதிர்பார்த்தனர். கூட்டுறவு துறை வெளியிட்ட இந்த அறிக்கையால் தமிழ்நாடு முழுவதும் அரசின் மீது அதிருப்தி கிளம்பியது.
இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கூட்டுறவுதுறை அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று வெளியிட்ட தகவலில், கடந்த ஆட்சியில் நகைக்கடன் மூலம் கோடிக்கணக்கில் மோசடிகள் கண்டறியப்பட்டுள்ளது. நகைக்கடன் தள்ளுபடி அடிப்படையில் உண்மையான ஏழை,எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றார்.
Also Read | TN Gold Loan Waiver: யாருக்கெல்லாம் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது? பட்டியல் இதோ!
குடும்ப அட்டை, ஆதார் விவரங்கள் சரியாக இல்லையென தெரிவித்து நிராகரிக்கப்பட்ட நபர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்றும், கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வைத்தவர்களில் 10,18,066 (50%) பேர்களுக்கு கடன் தள்ளுபடி உண்டு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குடும்ப அட்டை, ஆதார் விவரங்களை சரியான வழங்காதவர்கள் அதனை சரிசெய்து மீண்டும் அளித்தால் ஆய்வுசெய்து நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூட்டுறவுதுறை அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஒரு குடும்பத்திற்கு 5 பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன்களை சில தகுதிகளின் கீழ் உண்மையான ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்து அதற்கான தகுதிகள் குறித்தும், கடன் தள்ளுபடி பெறுவதற்கு எந்தெந்த நபர்களுக்கு தகுதி இல்லை என்பது குறித்தும் கூட்டுறவுதுறை பதிவாளர் சார்பில் நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்ற 48,84,726 பேரில் 35,37,693 பேருக்கு தள்ளுபடி கிடையாது எனவும், 28% பேர்களின் நகைக்கடன் மட்டுமே தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் என்றும், குடும்ப அட்டை மற்றும் ஆதார் எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்களுக்கு தள்ளுபடி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல், பயிர்க்கடன் தள்ளுபடி பெற்ற நபர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினருக்கு பொது நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்