உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாடுகள் காரணமாக சுற்றுச்சூழல் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பல்வேறு நாடுகளும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு அரசும் இதற்கான ஒரு முன்னெடுப்பை எடுத்து வருகிறது. அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மீண்டும் மஞ்சப்பை என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளது. 


இந்நிலையில் இந்த இயக்கத்தை அரசு மற்றும் அரசு அதிகாரிகள் மக்களிடம் தீவிரமாக கொண்டு சென்று வருகின்றனர். அந்தவகையில் தமிழ்நாடு வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாஹூ ஐஏஎஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "அரிசியில் இருந்து எடுக்கப்படும் தவிடு மூலம் உணவை வைக்க ஒரு சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இனிமேல் ஓட்டல்கள், உணவகங்கள் உள்ளிட்டவை இந்த பொருட்களை பயன்படுத்தி உணவை பேக் செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும். இந்த பொருட்கள் எதுவும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாது. ஆகவே பிளாஸ்டிக் பொருட்களை விடுத்து இந்தப் பொருட்களை பயன்படுத்துவது நல்லது" எனப் பதிவிட்டுள்ளார். 


 






மேலும் அந்தப் பதிவில் வீடியோ ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார்.  அந்த வீடியோவை பலரும் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர். முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “ மஞ்சப்பை அவமானம் அல்ல. அழகான நிறத்தில் இருக்கும் பிளாஸ்டிக் பைகள் எல்லாம் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் தன்மை கொண்டவை. சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை நாம் உடனடியாகக் குறைக்க வேண்டும். மஞ்சப்பைதான் சுற்றுச்சூழலுக்கு ஏற்றது.


ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பிறகு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள்தான் சூழலை மாசாக்குகின்றன. பிளாஸ்டிக்கை மண்ணில் போட்டால் அது மக்குவதற்கு பல ஆண்டுகள் ஆகும். இதனால், மண் பாதிக்கப்படுகிறது. மண் பாதிக்கப்பட்டால் வேளாண்மை பாதிக்கப்படுகிறது.பிளாஸ்டின் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். எனவே, பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க தமிழக அரசு ஏராளமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதன்படி, 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.



சமூக வலைதளங்களிலும் இடைவிடாது பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசாங்கம் மட்டுமே பிளாஸ்டிக் பொருட்களை ஒழித்துவிட முடியாது. மக்கள் நினைத்தால் மாற்றத்தை உடனடியாக செயல்படுத்த முடியும். எனவே, மஞ்சப்பைதான் சிறந்தது. அனைத்து தொழில்களிலும் முன்னோடியாக இருக்கும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் முன்னோடியாக திகழ வேண்டும்" எனக் கூறினார். 


மேலும் படிக்க: 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு திடீர் பதவி உயர்வு.. என்ன பதவி தெரியுமா?