சி.எஸ்.ஆர் நிதியை பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகளில் பொது மக்களுக்கு இலவசமாக தடுப்பூசிகள் வழங்கும் திட்டத்தை சென்னையில் வரும் 28ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 


ஜூன் 21-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட புதிய தாராளமயமாக்கப்பட்ட தடுப்பூசிக் கொள்கையின் கீழ், தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் தயாரிக்கும் 75 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்குகிறது. மீதமுள்ளவை தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுகின்றன. அவை பணம் செலுத்தும் நபர்களுக்கு தடுப்பூசி போடப் பயன்படுகிறது. இருப்பினும், தனியார் மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி குறைந்து வருகிறது. இந்நிலையில், நாட்டில் முதன் முறையாக தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனைக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில், சி.எஸ்.ஆர் நிதியை பயன்படுத்தி இலவசமாக தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், " இத்திட்டம் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் தான் செயல்படுத்தப்படவுள்ளது. இதுவரை, ரூ.5 கோடிக்கும் அதிகமாக நிதி வந்துள்ளது.   


TN Vaccine Wastage: இருப்பை விட அதிக தடுப்பூசி செலுத்தியதில் தமிழ்நாடு முதலிடம்!     


வரும் 28ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இத்திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார். 29ம் தேதி மாநிலம் முழுவதும் சிஎஸ்ஆர் நிதி மூலம் இணைக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது" என்று தெரிவித்தார்.               






முன்னதாக, 75:25 ஒதுக்கீட்டிற்கு எதிராக, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இடையேயான ஒதுக்கீட்டை 90:10 ஆக மாற்ற வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு முன்னதாக கோரிக்கை வைத்தார். 


இதுதொடர்பாக, அவர் எழுதிய கடிதத்தில், "தனியார் மருத்துவமனைகளுக்கு இந்த 25% ஒதுக்கீடு அவர்கள் தடுப்பூசி செலுத்திய உண்மையான அளவீடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில், அரசுத் தரப்பில் 1.43 கோடி டோஸ்கள் முற்றிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் தனியார் மருத்துவமனைகள் 6.5 லட்சம் அளவை மட்டுமே பயன்படுத்தியுள்ளன. இது வெறும் 4.5% மட்டுமே. நடப்பு மாதத்தில் கூட, மாநிலத்தில் நிர்வகிக்கப்படும் 43.5 லட்சம் டோஸ்களில், தனியார் நிறுவனங்கள் 4.5 லட்சம் அளவுகளுக்கு மட்டுமே பயன்படுத்தியுள்ளன. இது வெறும் 10% மட்டுமே. கிடைக்கக்கூடிய அளவுகளை ஆய்வு செய்து மற்றும் சரியான செயல் திறன் அடிப்படையிலான விநியோகத்தால் மட்டுமே இதைச் சரிசெய்ய முடியும்" என்று தெரிவித்தார். 




தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 1,232 தடுப்பூசி மையங்களில், தனியார் மையங்களின் எண்ணிக்கை 142  ஆக உள்ளது. அதாவது, கிட்டத்தட்ட 11சதவிகித தனியார் தடுப்பூசி மையங்களுக்கு 25% தடுப்பூசி டோஸ்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.