கடந்த ஏப்ரல் மாதம் தமிழத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றவர்களை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. இதில் அமைச்சர் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து அதிமுக வேட்பாளர் வி.ராமு, விராலிமலை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு எதிராக போட்டியிட்ட திமுக வேட்பாளர் எம்.பழனியப்பன், பெருந்துறை அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் வெற்றியை எதிர்த்து, திமுக கூட்டணியில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் பாலு ஆகியோர் தொடர்ந்திருந்த வழக்குகள் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.


 



இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விராலிமலை தொகுதியில், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை விநியோகம் செய்ததுடன் தேர்தல் ஆணையம் நிர்ணயித்ததைவிட அதிக பணம் செலவு செய்ததாக திமுக வேட்பாளர் எம்.பழனியப்பனின் மனுவில் குற்றம்சாட்டப்பட்டது. அமைச்சர் துரைமுருகன் போட்டியிட்ட காட்பாடி தொகுதியில் தகுதியான வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அதிமுக வேட்பாளர் வி.ராமுவின் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது, பெருந்துறை தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குறைபாடு மற்றும், முறையாக வாக்கு எண்ணிக்கையின்போது 8 1 வாக்குகள் எண்ணப்படவில்லை என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் பாலுவின் மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.


இந்த மூன்று வழக்குகளையும் விசாரித்த உயர்நீதிமன்றம், காட்பாடி எம்.எல்.ஏவும் அமைச்சருமான துரைமுருகன், விராலிமலை எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர், பெருந்துறை அதிமுக எம்.எல்.ஏ ஜெயக்குமார் ஆகியோரும் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம், தலைமை தேர்தல் அதிகாரி, தொகுதி தேர்தல் அதிகாரிகள் ஆகியோரும் 4 வாரத்தில் பதிலளிக்கக்கோரி வழக்கை செப்டம்பர் 6ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.