இந்தியா ஒலிம்பிக் வரலாற்றில் வாள்சண்டை போட்டிக்கு முதன்முதலாக தேர்வாகிய பவானிதேவி, தனது முதல்சுற்றில் 15 - 3 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார். இருப்பினும், இரண்டாவது சுற்றில், உலகின் மூன்றாவது வாள் சண்டை வீரரான Brunet என்பவரிடம் தோல்வியைத் தழுவினார். ஆட்டத்தின் கடைசி நிமிடம் வரை தீர்கமாக போராடிய அவர்,வாள் சண்டையில் ஓவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தியுள்ளார். பவானி மிகப்பெரிய விளையாட்டுக் கலாச்சார பின்புலம் கொண்ட வீட்டில் பிறக்கவில்லை. நான்கு உடன்பிறப்புகள் உட்பட குடும்ப உறுப்பினர்கள் யாரும் தீவிரமாக விளையாட்டில் ஆர்வம் கொண்டதில்லை. 1993-ஆம் ஆண்டு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை ஒரு மதபோதகர், தாய் இல்லத்தரசி. இவர் சென்னையில் உள்ள முருகா தனுஷ்கோடி பள்ளியில் பள்ளிப்படிப்பை கற்றார். விளையாட்டு மட்டுமே பள்ளிப் பாடங்கள் ஏற்படுத்திய கடுமையான சூழல் இருந்து தப்பிப்பதற்காகன ஒரே வழியாக அவருக்கு இருந்தது.
2004-ஆம் ஆண்டில் பள்ளி அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் கலந்துகொண்டார். 2007-ஆம் ஆண்டில் அமராவதியில் நடைபெற்ற ஜூனியர் வாள்சண்டையின் போது, இவரின் திறமைகளை அடையாள கண்ட பயிற்சியாளர், உடனடியாக கேரள தலசேரியில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் மையத்தில் இணைந்தார்.
திருப்புமுனை ஏற்படுத்திய ஜெ.ஜெயலலிதா:
கோ ஸ்போர்ட்ஸ் எனும் தொண்டு நிறுவனம் இவருக்கு உதவிகளை வழங்கி வருகிறது. இருப்பினும், நிதிச்சுமை காரணமாக 2007ம் ஆண்டு கொரியாவில் நடைபெற்ற சீனியர் வாள் சண்டை போட்டியில் கலந்துகொள்ள முடியாத சூழல் உருவானது. இதனைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதாவை நேரில் சென்று சந்தித்தார். அப்போது, முதல்வர் பதவியில் இல்லாத ஜெயலலிதா உடனடியாக நிதியுதவி அளித்துள்ளார். இது, பவானியின் வாழ்க்கையில் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
2009 ஆம் ஆண்டில், மலேசியாவில் நடந்த இளையோர் காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பின் சேபர் போட்டியில் கலந்து கொண்டு தனது முதல் சர்வதேச வெண்கல பதக்கத்தை வென்றார். அடுத்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கேடட் ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கமும், 2104 இல் பிலிபீன்சுவில் நடைபெற்ற ஆசிய போட்டியில் 23 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் வெள்ளி பதக்கமும் வென்றார்.
2015-ஆம் ஆண்டில் பெல்ஜியத்தில், நடைபெற்ற Flemish Open போட்டியில் வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார். அப்போது, முதல்வராக இருந்த ஜெ.ஜெயலலிதா தமிழ்நாடு ஒலிம்பிக் நிதியுதவி திட்டத்தில் பவானி தேவியை சேர்க்கும் உத்தரவை வெளியிட்டார். சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வெல்லக்கூடிய தகுதியும் திறமையும் உள்ளவர்களுக்கு தமிழ்நாடு ஒலிம்பிக் நிதியுதவி திட்டத்தின் (Tamil Nadu’s Mission Olympics Elite Athlete Scheme) கீழ் தனிப்பட்ட முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. 2016-2017 ஆண்டுகளில் சர்வதேச அளவில் வாள்சண்டைப் பட்டியலில் 36வது இடத்தைப் பெற்றவர் இவர். முதல் 50 இடங்களுக்குள் வந்த முதல் இந்தியர் என்ற பெருமையும் இவருக்கு சேரும்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது எளிதான காரியம் இல்லை என்பது தெரியும் ஆனால் அங்கே தான் வரலாற்றைப் படைக்க விரும்புவதாகச் சொல்கிறார் பவானி.இதற்காக காலை இரண்டு மணி நேரம் மற்றும் மாலை இரண்டு மணி நேரம் எனத் தொடர்பயிற்சி மேற்கொள்கிறார். சில சமயம் ஆறு மணி நேரம் கூடத் தொடர்ச்சியாகப் பயிற்சி எடுத்ததாகச் சொல்கிறார்