சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்திற்கான நிதி, நடப்பு நிதியாண்டில் இருந்து ஒரு தொகுதிக்கு 3 கோடி ரூபாயாக மீண்டும் அளிக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். 


முன்னதாக, கொரோனா தொற்று நோய் பரவுவதை தடுக்க மாவட்ட மற்றும் மாநில அளவில், மருத்துவ சிகிச்சைக்கான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வாங்குவதற்கும், தடுப்பு நடவடிக்கைகளுக்கும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.1 கோடியை மாநில அளவில் ஒருங்கிணைத்து தமிழ்நாடு அரசு பயன்படுத்திக்கொள்ள அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். 



சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் என்றால் என்ன?  


தமிழ்நாட்டில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதிகளில் தேவையான அடிப்படை உடகட்டமைப்பு பணிகளை உடனடியாக கண்டறிந்து அதனை செயல்படுத்துவதற்காக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிக்கு தேவையான கட்டமைப்பு கண்டறிந்து அப்பணியினை இத்திட்டத்தின்கீழ் செயல்படுத்த பரிந்துரை செய்யவேண்டும். இத்திட்டம், சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமப்புற பகுதிகளான ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களிலும் மற்றும் நகர்புற பகுதிகளான பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சி ஆகிய அனைத்து இடங்களிலும் மேற்கொள்ளப்படுகிறது,


ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 2019-20 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு நிதியாண்டிற்கும் தலா ரூ. 250 கோடியிலிருந்து 3.00 கோடியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.


மொத்த நிதியில் 21 சதவீதம் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் அதிக எண்ணிக்கையில் வாழும் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.


ரூ.3.00 கோடியில் வரையறுக்கப்பட்ட கூறு நிதியாக ரூ.1.50 கோடிக்கு முன்னுரிமை பணிகளை கட்டாயமாக எடுத்து செய்ய வேண்டும். ரூ.3.00 கோடியில் வரையறுக்கப்படாத கூறு நிதியான ரூ. 1.50 கோடிக்கு தடை செய்யப்பட்ட பணிகள் தவிர எந்த பணிகளையும் மேற்கொள்ளலாம்.


வரையறுக்கப்படாத கூறு நிதி (Untied funds) - தடைசெய்யப்பட்ட பணிகள்:   



  1. மத்திய அரசு, மாநில அரசு, பொதுத்துறை, கூட்டுறவு போன்ற நிறுவனங்களுக்கு கட்டடங்கள் கட்ட இயலாது.

  2. தனிநபர் / குடும்ப பயனுக்காக சொத்துக்களை உருவாக்க இயலாது. புதுப்பித்தல் பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள இயலாது.

  3. அசையும் பொருட்கள், உபகரணங்கள் மற்றும் தளவாட சாமான்கள் வாங்கக் கூடாது.

  4. அரசு உதவிபெறும் / சுயநிதி பள்ளிகள், பாலிடெக்னிக்குகள் மற்றும் கல்லூரிகளில் எவ்வித பணிகளையும் மேற்கொள்ள இயலாது.

  5. வணிக நிறுவனங்கள் / தொழிற்சாலைகளில் பணிகள் மேற்கொள்ள கூடாது.

  6. கடன் மற்றும் மானியம் மத்திய / மாநில / யூனியன் பிரதேச நிவாரண நிதிக்கு பங்களித்தல் கூடாது.

  7. நில எடுப்பு / நில எடுப்பு ஈட்டுத் தொகை போன்றவை வழங்க கூடாது.

  8. ஏற்கனவே முழுமையாக / பகுதியாக கட்டப்பட்ட பணிகளுக்கு தொகை செலுத்துதல் கூடாது.

  9. மத அமைப்புகள் / குழுக்களுக்கு சொந்தமான இடங்கள் / வழிபாட்டு தலங்களில் பணிகள் மேற்கொள்ள இயலாது.

  10. குட்டைகள் / ஊரணிகள் / ஆறுகள் / குளங்கள் / கால்வாய்கள் / வாய்க்கால்கள் தூர்வாருதல் கூடாது.

  11. சரளை / கப்பி சாலைகள் அமைக்க இயலாது.

  12. உயர் கோபுர மின்விளக்கு பொருத்த இயலாது.


நாடாளுமன்றம் தொகுதி மேம்பாட்டுத் திட்டம்:  


இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கருத்தில் கொண்டு, 2020-21 மற்றும் 2021-22 ஆகிய ஆண்டுகளுக்கான  நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தை  தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக மத்திய அரசு தெரிவித்தது இதன் மூலம் அடுத்த 2 ஆண்டுகளுக்கு, இந்திய ஒருங்கிணைந்த நிதிக்கு (Consolidate Fund of India) ரூ. 7900 கோடி வரவு கிடைக்கும்” என்றும் தெரிவிக்கப்பட்டது.


மேலும், வாசிக்க: 


Petrol Tax Cut: பெட்ரோலுக்கான 3 ரூபாய் வரிக்குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமல்- நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன்