மாநில பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் செய்தியாளர்களை சந்திப்பது மரபாக உள்ளது. அந்த அடிப்படையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து முடித்த பிறகு, நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 


கடினமான சூழ்நிலையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையால் ஏற்பட்ட வருவாய் இழப்பு, கூடுதல் செலவினங்கள், புதிய அரசு அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் ஆகியவற்றின் நெருக்கடிகள், கட்டாயங்களை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன


தரவுகளை சேகரித்து அதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்க வேண்டும், அரசுக்கு ஏற்பட்ட, ஏற்படக்கூடிய இழப்புகளை தவிர்பதற்கான முக்கியத்துவம், அரசின் சொத்துகளை எவ்வாறு நிர்வகிப்பது உள்ளிட்ட அம்சங்களை கொண்ட நிதிநிலை அறிக்கை நிதியமைச்சரால் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது


15ஆவது நிதிக்குழு அளித்த அறிக்கையில் தமிழ்நாட்டிற்கான நகராட்சிகளுக்கு அளிக்கப்பட்ட ஒதுக்கீடு குறைந்ததால்; 1500 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


மாற்றுத்திறனாளிகள் நலன் துறைக்கு கூடுதல் நிதி அளிக்கப்பட்டுள்ளது; காத்திருக்கும் பட்டியலில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கவும், கருவிகள் வாங்கவும் ஓய்வூதியம் அளிக்கவும் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது


அரசுக்கு சில வருவாய் இழப்புகள் இயற்கையாக ஏற்பட்டுள்ளது, அதே நேரத்தில் கூடுதல் வருவாய் ஈட்டும் முயற்சிகளும் வரவு செலவு திட்டத்தில் இடம் பெற்றுள்ளது


ஒட்டுமொத்த நிதிமேலாண்மையை பொறுத்த அளவில் 15ஆவது நிதிக்குழு அளித்துள்ள பரிந்துரைகளின் படி; நிதிப்பற்றாக்குறை சுமை எவ்வாறு இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வைக்கப்பட்டுள்ளது. 


நிதியமைச்சர் கூறியபடி மேற்கொண்டு கடன் நிலுவையை குறைக்கவும், கடன் பெறும் நிலையை மாற்றி அமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். தமிழ்நாடு அரசு பெறும் கடன்கள் அனைத்தும் மூலதன செலவுகளுக்கு மட்டுமே செலவு செய்யப்பட வேண்டும் என்பதே அரசின் நோக்கம். இந்தாண்டு இந்த நோக்கத்தை முழுமையாக செயல்படுத்த முடியாவிட்டாலும், இனி வரும் காலங்களில் முழுமையாக செயல்படுத்தப்படும். 


தற்போது கொரோனா காலம் என்பதால் மிக அதிக அளவில் செலவினத்தை குறைத்தாலோ அல்லது மிக அதிக அளவில் வருவாயை அதிகரித்தாலோ அதன் மூலம் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய அளவில் பொருளாதார பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் துல்லியமாக ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவுகள் வரவு செலவு திட்டத்தில் இடம்பெற்று இருக்கின்றன. 


பெட்ரோல் மீதான மாநில அரசின் வரியானது லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்துள்ள நிலையில், இந்த வரி குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் எனவும் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.