பட்ஜெட்டில் கீழடி அகழாய்வு பணிக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது உத்வேகத்தை கொடுக்கும் என்று எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் கூறியுள்ளார்.


தமிழ்நாடு அரசின் 2021-2022ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். சட்டமன்ற வரலாற்றில் கலைவாணர் அரங்கில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இயற்றலும் ஈட்டலும் என்று தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரை தொடங்கியது.  


அமைச்சர் வாசித்த இந்த பட்ஜெட் உரையில், “தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறையில் மேற்கொள்ள இந்த ஆண்டு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சி துறைக்கு ரூ.80.26 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கீழடி, ஆதிச்சநல்லூர், கொற்கை பகுதிகளில் நடைபெறும் ஆய்வுகள் தமிழர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன. கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு தமிழ் ஆர்வலர்கள் பலரும் வரவேற்பு அளித்துள்ளனர்.




இந்த நிலையில்,  கீழடி அகழாய்வு பணிக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது உத்வேகத்தை கொடுப்பதாக  எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “கீழடி அகழாய்வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 கோடி ரூபாய் என்பது மிக முக்கியமான ஒரு ஒதுக்கீடு ஆகும். இதுவரை ஏழு கட்டங்களுக்கு தோண்டியுள்ள நிலையில், இன்றைக்கு இந்த ஒதுக்கீடு என்பது மிக முக்கியமானது, ஒரு மைல்கல் என்று நான் நினைக்கிறேன். இந்த ஒதுக்கீட்டால் அங்கு இன்னும் நாம் ஆய்வுகள் மேற்கொள்ள பெரிய ஊக்கத்தை கொடுக்கும். நவீனமாக அகழாய்வை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு முனைந்துள்ளது வரவேற்கத்தக்கது” என்று கூறினார்.






பட்ஜெட் உரை தொடங்குவதற்கு முன்பு, பேச வாய்ப்பு கேட்ட அதிமுக உறுப்பினர்கள் முழக்கமிட்டு வெளிநடப்பு செய்தனர்.


நாளை வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் உரையுடன் தொடங்கும் சட்டசபை கூட்டம் செப்டம்டர் 21-ஆம் தேதி வரை மொத்தம் 29 நாட்கள் நடைபெற உள்ளது.


TN Budget 2021: சுற்றுச்சூழல் கண்காணிப்பு மைய அறிவிப்பு - வரவேற்கும் பூவுலகின் நண்பர்கள்..