தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2021-22 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையிலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். அதேநேரத்தில்  தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்த அறிவிப்புகள் இல்லாதது வருத்தம் அளிக்கிறது.


தமிழ்நாட்டில் ஊரக வேலை உறுதித்திட்டத்தின் அடிப்படையில் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கை நூறிலிருந்து 150 ஆக உயர்த்தப்படும்; மகளிருக்கான பேறுகால விடுமுறை ஓராண்டாக அதிகரிக்கப்படும்; மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.2756 கோடி கடன் தள்ளுபடி என்பன உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகியுள்ளன.


பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்த கோரிக்கையை செயல்படுத்தும் வகையில், காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளை கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்துவதற்காக முதலமைச்சர் தலைமையில் ரூ.500 கோடியில் புதிய இயக்கம் உருவாக்கப்படும்; தமிழகத்தின் காடுகள் மற்றும் மரங்களின் அடர்த்தியை 33% ஆக உயர்த்தும் நோக்குடன் மிகப்பெரிய அளவில் மரம் வளர்க்கும் திட்டம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ் மொழி, இலக்கியங்கள், தொல்லியல் ஆய்வுகள் ஆகியவற்றுக்காகவும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.




காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவ சாதனங்கள் பூங்கா, திருவள்ளூர் மாவட்டத்தில் மின்வாகனங்கள் பூங்கா, திண்டிவனம், மணப்பாறை, தேனி ஆகிய இடங்களில் உணவுப்பூங்காக்கள் அமைக்கப்படும்  என்பதும் வரவேற்கத்தக்கது. 9 மாவட்டங்களில் சிப்காட் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ள அரசு, அந்தத் திட்டங்களுக்கு விரைந்து செயல்வடிவம் கொடுக்க வேண்டும். பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டிருக்கிறது. கொரோனா காலத்தில் மக்கள் கடுமையான நிதிச்சுமைக்கு ஆளாகியுள்ள நிலையில், அடித்தட்டு மக்களின் நலன் கருதி வாக்குறுதி அளித்தவாறு பெட்ரோல் விலையை மேலும் ரூ. 2 குறைக்க வேண்டும்; விவசாயிகள் பயன்படுத்தும் டீசல் விலையையும் அரசு குறைக்க வேண்டும்.


மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவி தகுதியுள்ள குடும்பங்களை அடையாளம் கண்டு வழங்கப்படும் என்று அறிவித்துள்ள அரசு அதற்கான பணிகளை விரைவுபடுத்த வேண்டும். புதிய பணியிடங்களை உருவாக்குதல், காலியிடங்களை நிரப்புதல் மூலம் 5 லட்சம் பேருக்கு புதிதாக அரசுப் பணிகள் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றன; அவற்றை அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்.




 அடுத்த 10 ஆண்டுகளில் 17,970 மெகாவாட் புதிய மின்சாரத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை இலக்கு வைத்து செயல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் கடந்த 2014-ஆம் ஆண்டும் அதற்கு அடுத்த சில ஆண்டுகளிலும் தொடங்கப்பட்ட 6220 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் திட்டங்கள் பல்வேறு நிலைகளில் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. அவற்றை அடுத்த ஓராண்டிற்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். தமிழ்நாட்டை மின்மிகை மாநிலமாக மாற்றுவதற்கும், மின்சார வாரிய கடன்சுமையை குறைக்கவும் இது  மிகவும் அவசியமாகும்.


ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை இனிப்பு, புளிப்பு, கசப்பு ஆகியவை கலந்த கலவையாக உள்ளது. தமிழக அரசு எதிர்கொண்டு வரும் நிதி நெருக்கடிகளை புரிந்துகொள்ள முடிகிறது. இதே நிலை நீடித்தால் அதை மக்களால் தாங்க முடியாது. எனவே, நிதிச்சீர்திருத்தங்களை விரைந்து மேற்கொண்டு நிதிநிலைமையை சீர்செய்யவும், மக்கள் நலன் சார்ந்த வாக்குறுதிகளை விரைவாக செயல்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


மேலும், வாசிக்க: 


Petrol Tax Cut: பெட்ரோலுக்கான 3 ரூபாய் வரிக்குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமல்- நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன்