தமிழக அரசின் நடப்பாண்டுக்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று நிதியமைச்சர்  பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்த முறை காகிதம் இல்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண் துறைக்கென முதல் முறையாக தனி நிதிநிலை அறிக்கை நாளை தாக்கல் செய்யப்படுகிறது. இதனை அத்துறைக்கான அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.


பள்ளி கல்வித் துறை:  


பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.32,599.54 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.


மேலும், 865 மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் ரூ. 20 கோடி ஒடுகீட்டில் ஸ்மார்ட் வகுப்புகள் உருவாக்கப்படும் . அடிப்படைக் கல்வி அறிவு மற்றும் கணித அறிவை உறுதி செய்ய "எண்ணும் எழுத்தும் இயக்கம்" 66.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். மாநில கல்விக் கொள்கையை வகுக்க ‘உயர்மட்ட குழு’ அமைக்கப்படும் என்று அறிவித்தார். கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள கற்றல் இழப்புகளை குறைப்பதே இந்த அரசின் உடனடி முன்னுரிமையாக இருக்கும் என்று தெரிவித்தார்.  கடந்த நிதியாண்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ. 34,181 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், இந்த நிதியாண்டில் 32,599 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 




 


உயர்க்கல்வித் துறை:  தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறைக்கு ரூ.5,369.09 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  25 அரசு அறிவியல் மற்றும் கலை கல்லூரிகளில்  10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும். நான்கு அரசு பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் விடுதிகள் கூடுதலாக கட்டப்படும். ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை, கடலூர் மாவட்ட அரசுக் கல்லூரியாக ஆணை பிறபிக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த ஆண்டு புதிதாக 10 அரசு அறிவியல், கலை கல்லூரிகள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.  


பட்ஜெட் கூட்டத்தொடர்:  பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 16-ஆம் தேதி முதல் தொடங்கி நான்கு நாட்கள் நடைபெறுகிறது. அதன்பிறகு மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் 21-ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் மாதம் 21-ஆம் தேதிவரை நடைபெறும் என்று ஏற்கனவே தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்திருந்தார்.


மேலும், வாசிக்க: 


TN Budget 2021: கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படும் மத்திய அரசு: பிடிஆர் பட்ஜெட் உரை!  


TN Budget 2021: நமக்கு நாமே திட்டத்திற்கு ரூ.100 கோடி, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.20,000 கோடி கடன் உறுதி செய்யப்படும் - பி.டி.ஆர்