தமிழக அரசின் நடப்பாண்டுக்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். 


இந்த முறை காகிதம் இல்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண் துறைக்கென முதல் முறையாக தனி நிதிநிலை அறிக்கை நாளை தாக்கல் செய்யப்படுகிறது. இதனை அத்துறைக்கான அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.


100 கோடியில் மீண்டும் நமக்கு நாமே திட்டம் : 


1997-98 ஆண்டு, கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த போது மக்கள் பங்களிப்புடன் செயல்படுத்தக்கூடிய "நமக்கு நாமே திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் 2000-2001ம் ஆண்டுவரை செயல்படுத்தப்பட்டது. பின்னர் முதல்வராக வந்த ஜெயலலிதா, இத்திட்டத்தின் பெயரை 'கிராம தன்னிறைவுத் திட்டம்' என்று மாற்றம் செய்தார். இருப்பினும், இத்திட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளில் மாற்றம் ஏதும் செய்யவில்லை. பின்ன 2007ல் 'நமக்கு நாமே திட்டம்'  என்ற பெயரில் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.


திட்டத்தின் நோக்கம் என்ன?  


மக்களின் சுய உதவி மற்றும் சுய சார்பு தன்மையை ஊக்குவிக்கவும், பலப்படுத்தவும் மக்களுக்கு தேவையான திட்டங்களை அவர்களது பங்களிப்புடன் செயல்படுத்தி பொதுச் சொத்துக்கள் உருவாக்கி பராமரித்து வருவதே நமக்கு நாமே திட்டத்தின் நோக்கமாகும்.


அரசு, திட்டங்களை தீட்டி அதில் மக்கள் பங்கு கொள்வதற்கு பதிலாக, மக்கள் தாமே கண்டறிந்து, செயல்படுத்தும் திட்டங்களில் அரசு பங்கு கொள்வது நமக்கு நாமே திட்டத்தின் சிறப்பு அம்சம் ஆகும். இந்த வகையில் நமக்கு நாமே திட்டம், நகரம் மற்றும் கிராமம் ஆகிய அனைத்து பகுதியிலும் செயல்படுத்தப்படுகிறது. 


TN Budget 2021 Live Updates: மதுரையில் மெட்ரோ ரயில்... சென்னையில் விரிவாக்கம்... பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு!


2021- 22 நிதியாண்டில் நமக்கு நாமே திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கப்படும் என்று நிதியமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.


மேலும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.20,000 கோடி கடன் உறுதி செய்யப்படும் என்றும்  நிதியமைச்சர் தனது நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தார்.     


தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாட்டில் உள்ள மகளிர் சமூக, பொருளாதார மேம்பாடு அடையவும் மேலும் அரசியல் அதிகாரம் பெற உதவிடும் வகையிலும் இந்திய அரசின் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் செயல்படுத்துகிறது. இத்திட்டங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்களில் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான நிதி உதவி வங்கிகளின் மூலம் கடனாக பெற வழிவகை செய்கிறது.


பட்ஜெட் கூட்டத்தொடர்:  பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 16-ஆம் தேதி முதல் தொடங்கி நான்கு நாட்கள் நடைபெறுகிறது. அதன்பிறகு மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் 21-ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் மாதம் 21-ஆம் தேதிவரை நடைபெறும் என்று ஏற்கனவே தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்திருந்தார்.


மேலும், வாசிக்க: 


Petrol Tax Cut: பெட்ரோலுக்கான 3 ரூபாய் வரிக்குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமல்- நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன்