திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் ஊழல் செய்த அதிமுக அமைச்சர்கள் எல்லாம் சிறைக்கு போவது உறுதி என தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது அனல் கக்கினார் மு.க.ஸ்டாலின். அதேபோல, திமுக ஆட்சிக்கு வந்ததும் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை டிஜிபியாக நேர்மைக்கும் அதிரடிக்கும் பெயர்போன கந்தசாமி ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார். அப்போதில் இருந்தே அதிமுக தரப்பு கலக்கத்தில் இருந்தது. யார் வீட்டில் முதலில் ரெய்டு நடத்தப்போகிறார்கள் என்ற பேராவல் அதிமுக வட்டாரத்தில் மட்டுமின்றி அனைத்து தரப்பிலும் எழுந்தது.


தனது பரப்புரையில் மு.க.ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமிக்கு பிறகு மீண்டும் மீண்டும் உச்சரித்தது இரண்டு பெயர்கள். ஒன்று எஸ்.பி.வேலுமணி, மற்றொன்று சி.விஜயபாஸ்கர். வேலுமணியை ’ஊழல் மணி’என்றும், விஜயபாஸ்கரை ’குட்கா பாஸ்கர்’ எனவும் சொல்லி அப்போதே குடைச்சல் கொடுத்தார் அவர்.  முதலில் இவர்கள் மீதுதான் நடவடிக்கை பாயும் என எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்தபோது, அதற்கு நேர்மாறாக திமுக ஆளுநரிடம் அளித்த முதல் கட்ட ஊழல் பட்டியலில் இல்லாத நபரான முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது பாய்ந்தது லஞ்ச ஒழிப்புத்துறை.


அப்போதே, ’நான் தான் முதலில் எதிர்பார்த்தேன், திமுக லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவிவிட்டு என்னைத் தான் பழிவாங்குவார்கள் என நினைத்தேன். ஆனால், முதலில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தியிருக்கிறார்கள்’ என பேசி வெறுப்பேற்றினர் வேலுமணி. இப்படி பேசிய சில தினங்களில் அவர் வீட்டிலும் அவருக்கு தொடர்புடைய இடங்களிலும் ரெய்டு நடத்தி தனது ஆட்டத்தை அரங்கேற்றியிருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை.


இந்த ரெய்டு எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்டாலும், அதே நேரத்தில் சத்தமில்லாமல், அதிமுக ஆட்சியில் வேலுமணிக்கு உதவிய சில முக்கிய அதிகாரிகளுக்கு சொந்தமான இடத்திலும் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.



தலைமைப் பொறியாளர் நந்தகுமார்


அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களிலும் அதேபோல், வேலுமணி தொடர்புடைய இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் அவர்களுக்கு சம்மன் அனுப்பி, விசாரணைக்கு வருமாறு லஞ்ச ஒழிப்புத்துறை அழைக்க திட்டமிட்டுள்ளது.



பிரகாஷ் ஐ.ஏ.எஸ்


குறிப்பாக, 2014 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்தில் உள்ளாட்சித் துறையில் பணியாற்றியவர்கள், சென்னை, கோவை மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் துணை ஆணையர்கள், நகராட்சி நிர்வாக ஆணையர்கள், தலைமை செயற்பொறியாளர்கள் என டெண்டர்கள் திட்டமிடும் / வழங்கும் அதிகாரத்தில் இருந்த அதிகாரிகளுக்கு இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.



கோவை மாநகராட்சி ஆணையராக இருந்த விஜயகார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்


அதில், நகராட்சி நிர்வாக ஆணையராக இருந்து கடந்த 2019ல் சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்ட பிரகாஷ், கோவை மாநகராட்சி ஆணையராக இருந்த விஜயகார்த்திகேயன், கோவை துணை ஆணையராக பதவி வகித்த மதுராந்தகி, நகராட்சித் துறை செயலர் பதவியில் இருந்த ஹர்மந்தர் சிங், நகராட்சி ஆணையராக பணியாற்றிய பாஸ்கரன், சென்னையில் தலைமை செயற்பொறியாளராக பணியாற்றிய நந்தகுமார் மற்றும் புகழேந்தி உள்ளிட்டோர் இந்த விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



தான் அப்பழுக்கற்ற அதிகாரி என்று தனுக்கு தானே சான்று கொடுத்த பிரகாஷ்


இதில் நகராட்சி நிர்வாக ஆணையராகவும், சென்னை மாநகராட்சி ஆணையராகவும் இருந்த பிரகாஷ், நெல்லை மாவட்ட ஆட்சியராக பணியாற்றியபோது ‘தான் ஒரு அப்பழுக்கற்ற அதிகாரி’ என்ற சான்றிதழில் தானே கையெழுத்திட்டு கொடுத்து திமுக ஆட்சியின் போது சென்னையில் அரசு இடத்தை வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.



கோவை மாநகராட்சி துணை ஆணையராக இருந்த மதுராந்தகி ஐ.ஏ.எஸ்


இவர்களில் சட்டத்திற்கு புறம்பாக எஸ்.பி.வேலுமணிக்கு உதவியவர்கள் யார் என்பது குறித்தும் அது தொடர்பான ஆவணங்களை ஆராய்ந்தும் வருகிறது லஞ்ச ஒழிப்புத்துறை. இதனால் அதிமுக வட்டாரம் மட்டுமின்றி அதிகாரிகள் வட்டாரமும் அதிர்ந்துபோய் கிடக்கிறது.