தமிழக சட்டப்பேரவையில் வேளாண்துறைக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது, ஆதி திராவிட சிறு, குறு விவசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ.10 கோடி ஒதுக்கீடு - ஆதி திராவிட சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20% மானியம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
பட்ஜெட் 2023
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று தமிழ்நாட்டின் 2023-2024ம் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதில் மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.1000 வழங்குவது, பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை விரிவாக்குவது, சென்னையில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மையம் போன்ற பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதைதொடர்ந்து நடைபெற்ற சட்டப்பேரவை அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதில், சட்டசபை கூட்டத்தை ஏப்ரல் 21ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
வேளாண்துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையானது தமிழகம் முழுவதும் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், வேளாண் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் பல்வேறு வழிகளில் கருத்து கேட்டு உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு கருத்துக்களை கேட்டு உருவாக்கப்பட்டுள்ள பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.
வேளாண் பட்ஜெட்
அதன்படி, சிறுதானிய பயன்பாட்டை அதிகரிக்க நீலகிரி, தருமபுரி மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பண்ருட்டி பலாவிற்கு ஒருங்கிணைந்த தொாகுப்பு அமைத்து பகுதிகளுக்கு ஏற்ப பலா ரகங்களை அறிமுகம் செய்து கடலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் 2500 ஹெக்டேரில் உயர்த்தி ரூபாய் 3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளின் நலன் காக்கும் சிறப்பு ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூபாய் 195 கூடுதலாக வழங்கப்படும் ஆகிய அறிவிப்புகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார்.
அதில் குறிப்பாக, வரும் நிதியாண்டில் ஆதிதிராவிட சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.10 கோடி ஒதுக்கீட்டிலும், பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீட்டிலும், மொத்தமாக 11 கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் வேளாண் இயந்திரங்கள், மதிப்புக்கூட்டு இயந்திரங்கள், சூரிய சக்தி பம்புசெட்டுகள், சூரிய சக்தி உல்ர்த்திகள், குளிர் சாதனக் கிடங்குகள், ஒருங்கிணைந்த பண்ணையம், பசுமைக்குடில், நிழல்வலைக்குடில் போன்ற உயர்மதிப்பு இனங்களுக்கு 20 சதவீத கூடுதல் மானியம் வழங்கப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.