தமிழ்நாட்டில் உள்ள அரசு ஊழியர்களின் பிரதான கோரிக்கையாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் பழைய ஓய்வூதிய திட்ட அறிவிப்பு வெளியாகும் என்று அரசு ஊழியர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.


கண்டன ஆர்ப்பாட்டம்:


தமிழக பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாததால் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பெரிதும் அதிருப்தியடைந்தனர். இந்த நிலையில், தமிழ்நாடு பட்ஜெட்டில் தாங்கள் எதிர்பார்த்த பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெறாததை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.


கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசின் நிதித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில், புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து விலகி பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற விரும்பும் அரசு ஊழியர்களின் விவரங்கள் கேட்கப்பட்டிருந்தது. இதனால், ஆளும் தி.மு.க. அரசு வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் ஓய்வூதிய அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்ப்புடன் அரசு ஊழியர்கள் காத்திருந்தனர். ஆனால், அதுபோன்ற எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதன்காரணமாகவே இன்று அரசு ஊழியர்களின் பல்வேறு சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.


பழைய ஓய்வூதிய திட்டம்:


தமிழ்நாட்டில் 2004ம் ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன்படி, தேசிய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கான பென்சன் திட்டமானது பங்களிப்பு பென்சன் திட்டம் என்ற முறையில் அரசு செயல்படுத்தி வருகிறது.


இந்த பென்சன் திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத்திற்கு எந்த உத்திரவாதமும் இல்லை என்பதே அரசு ஊழியர்களின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது. மேலும், பழைய ஓய்வூதிய திட்டத்தில் இடம்பெற்றிருந்த பல்வேறு பலன்கள் இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் இல்லை என்பதும் அரசு ஊழியர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. மேலும், தி.மு.க. சட்டமன்ற தேர்தலுக்காக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற வாக்குறுதி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தி.மு.க. அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: TN Agri Budget: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல்.. விவசாயிகள் எதிர்பார்ப்பு என்னென்ன?


மேலும் படிக்க: கள்ளக்குறிச்சி : உயிரிழந்த தந்தையின் உடல் முன்பு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்ட மகன்