TN Agri Budget 2023 LIVE: வேளாண் பட்ஜெட்டில் ரூ.38,904 கோடி நிதி ஒதுக்கீடு - அறிவிக்கப்பட்ட திட்டங்கள் என்னென்ன?
Tamil Nadu Agriculture Budget 2023 LIVE Updates: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படும் வேளாண் பட்ஜெட் குறித்த தகவல்களை உடனுக்குடன் இங்கே காணலாம்.
2023-24 ஆம் ஆண்டில் வேளாண் பட்ஜெட்டில் ரூ.38,904 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.5,897 கோடி அதிகமாகும். 2022-23 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 33,007 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
காவிரி டெல்டா பகுதியில் திருச்சி -நாகை இடையே வேளாண் தொழில் பெருந்தடம் அமைக்க ரூ.1,000 கோடி ஒதுக்கீடு - வேளாண் பல்கலைக்கழகங்களுக்கு ரூ.100 கோடி நிரந்தர மூலதன வைப்பு நிதியாக வழங்கப்படும்
நடப்பாண்டில் விவசாயிகளுக்கு ரூ.14 ஆயிரம் கோடி கூட்டுறவு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் - விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க ரூ.6,536 கோடி ஒதுக்கீடு
அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் சிறுதானிய உணவக சிற்றுண்டி நிலையம் அமைக்கப்படும் - முதற்கட்டமாக 25 உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகங்கள் தனியார் பங்களிப்புடன் உருவாக்கப்படும்
நடப்பாண்டில் 25 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை - சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.100 ஊக்கத்தொகையும், பொது ரகத்திற்கு ரூ.75ம் ஊக்கத்தொகை வழங்கப்படும்
27 சேமிப்பு கிடங்குகளில் ரூ.54 கோடியில் மறுகட்டமைப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அதிக வரத்துள்ள 100 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் ரூ,50 கோடி செலவில் கட்டமைப்பு வசதிகள் புதுப்பிக்கப்படும்.
ரூ.3 கோடியில் பூச்சிகள் அருங்காட்சியங்கள் மேம்படுத்தப்படும் - பூச்சிகள் பற்றிய புரிதலை அதிகரிக்க கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள அருங்காட்சியகம் மேம்படுத்தப்படும்
காவிரிநீர் கடைமடை வரை சென்று சேர ரூ.1,146 கி.மீ. தொலைவு வாய்க்காலை தூர ரூ.5 கோடி ஒதுக்கீடு
25 உழவர் சந்தைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு - உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகளுக்கு சிற்றுண்டி, மூலிகை சூப் வழங்க நடவடிக்கை
ரூ.1 கோடி செலவில் 500 இளைஞர்களுக்கு வேளாண் கருவிகளை இயக்க பயிற்சி வழங்கப்படும் - கிருஷ்ணகிரி அரசம்பட்டி தென்னை, பன்னீர் ரோஜா உள்ளிட்டவற்றிற்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும்
பள்ளி மாணவர்களுக்கு விவசாயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த பண்ணைச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படும் - விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், வாடகை இயந்திரங்கள் வழங்க ரூ.125 கோடி ஒதுக்கீடு
பனை மரம் ஏறும் இயந்திரங்களை கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் - 10 லட்சம் பனைவிதைகள் வழங்கப்படும் எனவும், பனை ஓலை தயாரிக்க மகளிருக்கு பயிற்சி வழங்கப்படும்
தேனி மாவட்ட வாழைக்கு தனி அடையாளம் உருவாக்கிட ரூ.130 கோடியில் தனித்திட்டம் தொடங்கப்படும் - மதுரை மல்லிகை உற்பத்தியை மேம்படுத்த தொகுப்பு ஏற்படுத்தப்படும்
21 மாவட்டங்களில் பலா சாகுபடியஒ 5 ஆண்டுகளில் 2,500 ஹெக்டேரில் உயர்த்த ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு - முந்திரி சாகுபடியை கூடுதலாக 550 ஹெக்டேர் அதிகரிக்க நடவடிக்கை
தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் 53,400 ஹெக்டேர் நுண்ணீர் பாசன முறையினை நிறுவுவதற்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு
வெளிநாட்டு வேளாண் தொழில்நுட்பங்களை தெரிந்துக்கொள்ள விவசாயிகளுக்கு அயல்நாட்டில் பயிற்சி - இத்திட்டத்திற்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு
தக்காளி ஆண்டு முழுவதும் கிடைக்க ரூ.19 கோடி ஒதுக்கீடு - வெங்காயம் கிடைக்க ரூ.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் சௌசௌ, பட்டாணி, பீன்ஸ் போன்ற குளிர்கால காய்கறிகளின் சாகுபடிக்கு மானியம் வழங்கப்படும்
நூற்பாலைகளுக்கு தேவையான பஞ்சை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யும் வகையில் ரூ.12 கோடியில் பருத்தி இயக்கம் செயல்படுத்தப்படும் - மல்லிகை பயிர் வேளாண் முறைகளை விவசாயிகளுக்கு கற்றுத்தர ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு
ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடியில் மிளகாய் மண்டலம் அமைக்கப்படும்
ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடியில் மிளகாய் மண்டலம் அமைக்கப்படும்
ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடியில் மிளகாய் மண்டலம் அமைக்கப்படும்
சேலம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கழிவு மண்ணிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட இயற்கை உரங்களை தயாரிக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு - 5 ஆண்டுகளில் 1500 ஹெக்டேரில் கருவேப்பிலை சாகுபடியை அதிகரிக்க ரூ.2.5 கோடி ஒதுக்கீடு
தென்னை வளர்ச்சி மேம்பாடு என்ற புதிய திட்டம் அறிமுகம் - தேசிய அளவில் தென்னை உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் பெற ரூ.20 கோடி ஒதுக்கீடு
கரும்பு விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் சிறப்பு ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ.195 கூடுதலாக வழங்கப்படும்- குறைந்த சாகுபடியில் அதிக மகசூல் எடுக்கும் கரும்பு சாகுபடி மேம்பாடு திட்டத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு
ஆதி திராவிட சிறு, குறு விவசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ.10 கோடி ஒதுக்கீடு - ஆதி திராவிட சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20% மானியம் வழங்கப்படும்
ஆடு,மாடு, தேனீ உள்ளிட்டவற்றை வளர்க்கும் பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள நிதியுதவி, வட்டியில்லா கடன் அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - விவசாயிகள் அங்கக சான்றிதழ் பெறுவதை ஊக்குவிக்க ஆண்டுக் கட்டணம் ரூ.10 ஆயிரம் மானிய தொகை அறிவிக்கப்படும்
எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை ஊக்குவிக்க 14 மண்டலங்களை உள்ளடக்கிய சிறப்பு மண்டலம் - நிலக்கடலை, சூரியகாந்தி உள்ளிட்ட எண்ணெய் வித்துகளின் உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.33 கோடி ஒதுக்கீடு
உழவர் நலன் சார்ந்த தகவலை கணினி மயமாக்க Grains என்ற இளையதளம் அறிமுகம்- பயிர் சாகுபடி பரப்பளவை அதிகரிக்க மத்திய அரசு நிதியுதவியுடன் ரூ.30 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்
வேளாண் உற்பத்தி, கொள்முதல் உள்ளிட்டவற்றிற்காக 37 மாவட்டங்களில் பணமில்லா பரிவர்த்தனையை விரிவுப்படுத்த திட்டம் - 355 வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் ரூ.2 கோடியில் மின்னணு உதவி மையங்கள் அமைக்கப்படும்.
சிறு -குறு விவசாயிகள் மற்றும் நிலமற்ற தொழிலாளர்களுக்கு ரூ.15 கோடியில் 60 ஆயிரம் வேளாண் கருவிகள் தொகிப்பு வழங்கப்படும் - 1 லட்சம் ஏக்கரில் மாற்று பயிர் சாகுபடிக்கு ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு
ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண்ணில் ஊட்டச்சத்து இருப்பதால் இந்தாண்டும் வயல்களுக்கு இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் - வட்டார அளவில் விவசாயிகள் தகவல்களை பரிமாறிக்கொள்ள வாட்ஸ்அப் குழுக்கள் அமைக்கப்படும்.
சிறப்பாக செயல்படும் அங்கக விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பணம் மற்றும் நம்மாழ்வார் விருது வழங்கப்படும்
குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் - நீலகிரி மாவட்டத்தில் ரூ.50 கோடி அங்கக வேளாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்
ஊருக்கு 300 குடும்பங்கள் வீதம் 15 லட்சம் இலவச தென்னங்கன்றுகள் வழங்கப்படும் - 2504 கிராம ஊராட்சிகளில் தென்னங்கன்று இல்லாத குடும்பங்களுக்கு தலா 2 வீதம் தென்னங்கன்றுகள் வழங்கப்படும்
நெல் சாகுபடி மூலம் அதிக மகசூல் செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூ.5 லட்சம் பரிசு சிறுதானிய விவசாயிகளுக்கும் நீட்டிக்கப்படுகிறது.
சிறுதானிய பரப்பை அதிகரிக்க 20 மாவட்டங்கள் அடங்கிய 2 சிறுதானிய மண்டலங்கள் அமைக்கப்படும் - 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம வேளாண் முன்னேற்ற குழு அமைக்கப்படும்
வறட்சி, வெள்ள பாதிப்புகளை சமாளிக்கு வகையில் புதிய பயிர் ரகங்களை உருவாக்க நடவடிக்கை - தரிசாக உள்ள நிலங்களை கண்டறிந்து ஆள்துளை கிணறுகள் அமைக்கப்படும்.
2021-22 ஆம் நிதியாண்டில் 185 வேளாண் பட்டதாரிகளுக்கு தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது - 2,504 கிராமங்களில் ரூ.230 கோடி நிதியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்டம் செயல்படுத்தப்படும்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் மட்டுமின்றி பயறு, கொப்பரை தேங்காயும் கொள்முதல் - வரும் நிதியாண்டில் 127 மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வரலாறு காணாத அளவில் நெல் நேரடி கொள்முதல் அதிகளவில் செய்யப்பட்டுள்ளது - ரூ.1695 கோடி அளவிற்கு பயிர் காப்பீடு மானியமாக 6 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
நீர் நிலைகளை தூர் வாரியதால் நிலத்தடி நீர் அதிகரித்து வருகிறது - 2 ஆண்டுகளில் 1.5 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூல் செய்ய இலக்கு - தமிழ்நாட்டில் சாகுபடி பரப்பு 1.93 லட்சம் ஹெக்டேர் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 3வது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் - பச்சை துண்டு தோளில் போட்டுக் கொண்டு அவர் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினார்.
வேளாண் பட்ஜெட் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் வேளாண் விளைபொருள் ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட பல பிரிவுகளைச் சேர்ந்த மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டு தயார் செய்யப்பட்டுள்ளது.
Background
TN Agriculture Budget 2023 LIVE
தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
2023 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்று சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில் தமிழ்நாடு அரசின் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக சட்டப்பேரவை நேற்று மீண்டும் கூடியது.
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மகளிருக்கான உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை துறை ரீதியாக அறிவித்தார். மேலும் அரசால் தற்போது செயல்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ள திட்டம், எதிர்காலத்தில் செயல்படுத்தப்போகும் திட்டம் போன்றவற்றிற்கு நிதி ஒதுக்கீடு போன்றவை குறித்தும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்திய சபாநாயகர் அப்பாவு, பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடக்கும் என தெரிவித்தார்.
இதனிடையே சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், தாக்கல் செய்யப்படும் 2வது முழுமையான வேளாண் பட்ஜெட் இதுவாகும். இதனை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களை தொடர்ந்து தமிழ்நாட்டில் தான் வேளாண் துறைக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
இதற்காக விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் வேளாண் விளைபொருள் ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட பல பிரிவுகளைச் சேர்ந்த மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டது. மேலும் tnfarmersbudget@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம், 9363440360 என்ற வாட்ஸ்அப் மூலமும் கருத்துகளை அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து நாளை தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் சட்டப்பேரவை இனி மார்ச் 23 ஆம் தேதி வழக்கம்போல செயல்படும். அன்றையதினம் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -