தமிழ்நாட்டில் தற்போது கூலி வேலை உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர், கோவை, சென்னை ஆகிய பெருநகரங்களில் லட்சக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் கட்டிட தொழில், தொழிற்சாலை, வாட்ச்மேன், உணவகங்கள், பெரும் வணிக வளாகங்களில் பணியாற்றி வருகின்றனர்.


தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டு மக்களின் வேலைவாய்ப்பை தட்டிப்பறிப்பதாக குற்றச்சாட்டுகளை சிலர் முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், சிலர் சமூக வலைதளங்களில் வட மாநிலத்தவர்கள் மீது தமிழ்நாட்டில் தாக்குதல் நடத்தப்படுவது போல வீடியோக்களையும், கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். இது அவர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தேவையற்ற பதற்றத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி வருகிறது.




திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, “கடந்த சில தினங்களாக வடமாநில தொழிலாளர்கள் அச்சுறுத்தல் காரணமாக திருப்பூரில் இருந்து வெளியேறுவதாகவும் அவர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் வாட்ஸ் அப் மற்றும் இதர சமூக வலைதளங்களில் 3 வீடியோக்கள் பரவி வருகிறது. இதில் ஒரு வீடியோவானது திருப்பூர் மாநகரில் ஜனவரி மாதம் 14-ந் தேதி ரியா பேசன்ஸில் டீ குடிக்கும் போது சிகரெட் புகையை விட்டதால் ஏற்பட்ட பிரச்சினைக்கு வேலம்பாளையம் காவல் நிலையத்தில் 27.1.2023ம் ஆணடு வழக்குப்பதிவு செய்யப்பட்டு இரண்டு எதிரிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு வழக்கு விசாரணையில் உள்ளது.




மற்ற 2 வீடியோக்கள் எதுவும் திருப்பூர் மாவட்டத்தில் நடந்தவை கிடையாது. இவைகள் பொய்யாக சித்தரித்து போடப்பட்டு வருகிறது. இது வதந்தியாகும். இதை யாரும் நம்ப வேண்டாம். இதற்காக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனிப்பிரிவில் கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் தனியாக தொடங்கப்பட்டுள்ளது. இதில் வட மாநில தொழிலாளர்களின் பிரதிநிதிகளே இருப்பார்கள். இதற்காக 24 மணிநேரமும் செயல்படும் செல்போன் எண் 949811320 மற்றும் 0421 – 2970017 எண்களில் வட மாநிலத்தவர்கள் தொடர்பு கொள்ளலாம்.


இங்கு அனைத்து மாநிலத்தினரும் தகுந்த பாதுகாப்புடன் வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. வதந்தியாக பரவும் வீடியோக்களை வட மாநில தொழிலாளர்கள் யாரும் நம்ப தேவையில்லை.”


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சூழலில், இன்று வட இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாட்டில் இந்தி பேசும் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சம்பந்தமே இல்லாத இரண்டு வீடியோக்களை பதிவிட்டு அவதூறு பரப்பியிருந்தார். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டதுடன், தமிழ்நாடு டி.ஜி.பி.யும் வீடியோ வாயிலாக விளக்கம் அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: MK Stalin Press Meet: நாலாம்தர பேச்சாளர் போல பேசிய இபிஎஸ்க்கு மக்கள் கொடுத்த பாடம் - வெற்றி குறித்து முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி


மேலும் படிக்க: Assembly Election Results 2023 LIVE: திரிபுராவில் தனித்து ஆட்சி அமைக்கும் பாஜக...நாகாலாந்தில் சொல்லி அடித்த என்டிபிபி - பாஜக கூட்டணி..!