மதுரை அரசு ராஜாஜி மருத்துவனை மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் ஒரு கோடியே 2 லட்சம் மதிப்பீட்டில் 16 கட்டண படுக்கை வசதிகளின் கூடிய பிரிவினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய போது, “மதுரையில் 16 அறைகள் கொண்ட கட்டண படுக்கை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான செலவு ஒரு கோடியே 2 லட்சம் ஒவ்வொரு அறையிலும் ஏசி, தனி கழிவறை, டிவி, ஹீட்டர், உதவியாளர் ஆகிய பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. தனியறை ஒன்றுக்கு 1200 ரூபாய் கட்டணமாகவும்,  சொகுசு அறை ஒன்றுக்கு 2000 ரூபாயும் கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


 

 

அரசு மருத்துவமனைகளில் இதுபோன்ற தனி அறைகள் கொண்ட கட்டண படுக்கை பிரிவு என்பது சென்னையை அடுத்து தற்பொழுது மதுரையிலும் தொடங்கப்பட்டுள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அறுவை சிகிச்சையில் தென்னிந்தியாவிலேயே முதன்மை இடத்தை பெற்றுள்ளது.  கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டதில் இருந்து  இதுவரை 232 பேருக்கு மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.  இதில் 106 பேர் திருநங்கைகள் 126 திருநம்பிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.



 

முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 110 பேருக்கு பாலின மாற்றுஅறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதில் 94 திருநம்பிகளும், 16 திருநங்கைகளும் உள்ளனர். மேலும் 180 பேருக்கு அரசின் உதவி பெறுவதற்கான சான்றுகள் வழங்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் தொடங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மதுரை அரசு மருத்துவமனைக்கு 2.5 கோடி மதிப்பீட்டில் கருத்தரிப்பு மையத்திற்கான உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படும் பணிகள் நடைபெற்றுவருகிறது.



 

எய்ம்ஸ் மருத்துவமனை பொறுத்தமட்டில் ஜெய்கா துணைத்தலைவரை சந்தித்துள்ளோம். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மாநில - மத்திய அரசின் கூட்டுநிதியில் அறிவிக்கப்பட்ட நிலையில், மதுரை எய்ம்ஸ்க்கு மட்டுமே ஜெய்கா நிறுவன நிதியுதவியுடன் கட்டுவதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ச்சியாக மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்தி வருகிறோம். மத்திய அரசு முறையாக மதுரை எய்ம்ஸ் பணிகள் குறித்த ஆய்வினை மேற்கொள்ளதாதே மதுரை எய்ம்ஸ் பணிகள் தொடங்க தாமதம் ஏற்பட்டதாற்கான காரணம். மதுரை எய்ம்ஸ் கட்டிட பணி 2024 டிசம்பரில் தான் தொடங்கும், இதையடுத்து பணிகள் 4 ஆண்டுகள் நடைபெற்று 2028 டிசம்பரில் தான் முழுமையாக முடியும்” என்றார்.