Tiruppur Accident: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே காரும் டேங்கர் லாரியும் மோதிய விபத்தில் 3 பெண்கள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
என்ன நடந்தது?
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மணக்கடவு பகுதியில் இன்று மாலையில் காரும், டேங்கர் லாரியும் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, பழனியில் இருந்து தாராபுரம் நோக்கி வந்த கார் எதிரே வந்த டேங்கர் லாரி மீது மோதியது. இந்த விபத்தில் டேங்கர் லாரியும், காரும் நொறுங்கியது. இதனால், காரில் பயணித்தவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதனை அடுத்து, அவ்வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காரில் பயணித்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும், படுகாயம் அடைந்த இரண்டு பேரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 5ஆக உயர்ந்தது. மேலும், ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர் தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிகிறது.
கோயில் சென்று திரும்பியபோது சோகம்
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையின்போது காரில் பயணித்தவர்கள் பழனி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊர் திரும்பியபோது டேங்கர் லாரியும், காரும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிந்தது தெரியவந்தது.
மேலும், உயிரிழந்தவர்களில் 3 பேர் பெண்கள், 2 பேர் ஆண்கள் என்றும் இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க
கல்வித்துறைக்கும் ஆளுநருக்கும் என்ன பிரச்சினை? திருப்பி அனுப்பிய மசோதாக்கள் சொல்லும் ரகசியம் என்ன?
Annamalai University: அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் 56 பேர் அதிரடி பணிநீக்கம்: என்ன காரணம்?