மத்திய- மாநில அரசுகள் எதிரெதிராக இருந்தால், மாநிலத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள்கூட பூதாகரமாக வெடிப்பது வழக்கம். ஆளுநருக்கும் ஆளும் மாநில அரசுக்கும் மோதல் முற்றுவது ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது.


தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் முரண்பாடு உச்சத்தை எட்டி வருகிறது. இரண்டு தரப்பும் மாறி மாறி எதிர்த் தரப்பைக் குற்றம்சாட்டிக் கொண்டிருக்கின்றனர்.


இதற்கிடையில்  தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களை ஆளுநர் திருப்பி வருகிறார். இதற்கு அரசு கண்டனம் தெரிவித்து வருகிறது. அதேபோல மறைந்த மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யாவுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கமும் ஆளுநர் மறுப்பு தெரிவித்திருந்தார். இதற்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கண்டனம் தெரிவித்திருந்தார். பல்கலை. பட்டமளிப்புகளையும் புறக்கணித்து வருகிறார்.


பட்டமளிப்பு விழாக்களைப் புறக்கணிக்கும் அமைச்சர் பொன்முடி


கடந்த அக்டோபரில் நடைபெற்ற இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அதனால் அந்த விழாவில் மட்டும் அமைச்சர் பொன்முடி, ஆளுநருடன் சேர்ந்து கலந்துகொண்டார்.


முன்னதாக மதுரை காமராஜர் பல்கலை. மற்றும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களுக்கு பொன்முடி செல்லாத நிலையில், திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவையும் புறக்கணித்தார். 


இந்த நிலையில சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை என, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த மசோதாக்கள் அனைத்தும் உயர் கல்வித்துறையின் பல்கலைக்கழகங்கள் சம்பந்தப்பட்டவை ஆகும்.


ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய மசோதாக்கள் என்னென்ன?



  1. சென்னை பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா



  1. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா



  1. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா



  1. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா



  1. தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா



  1. தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா



  1. தமிழ் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா



  1. தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா



  1. அண்ணா பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா



  1. தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட திருத்த மசோதா


எதற்குமே ஒப்புதல் இல்லை


இவை தவிர்த்து, பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை ஆளுநருக்கு பதிலாக அரசே நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரப்பட்டது. இதன்மூலம் பல்கலைக்கழகங்களைக் கண்காணிக்கும் அதிகாரம் அரசுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழுவில் நிதித்துறைச் செயலாளரைச் சேர்க்க வேண்டும் என்றும் அரசு தெரிவித்திருந்தது. எனினும் இவை எதற்குமே ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கவில்லை.  


அவர் திருப்பி அனுப்பியுள்ள மசோதாக்களில் பெரும்பாலானவை பல்கலைக்கழகங்கள் தொடர்பானவை என்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் நீண்ட காலம் ஒப்புதல் அளிக்காமல் இருந்தார்.


என்ன பிரச்சினை?


இதனால் உயர் கல்வித்துறைக்கும் ஆளுநருக்கும் என்ன பிரச்சினை என்று கேள்வி எழுந்துள்ளது. பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் இருப்பதால், கல்வி நிறுவனங்களின் அதிகாரத்தைக் கைப்பிடிக்குள் வைத்திருக்க முயற்சிக்கிறார் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.