சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் 56 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. போலியான கல்வி சான்றிதழ் அளித்து பணிபுரிந்து வந்த புகார் மீது உயர் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பின்னணி என்ன?


கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. நிதி நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக, பல்கலைக்கழகத்தை அரசே எடுத்துக்கொண்டது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அரசு உடைமையாக்கப்பட்ட பிறகு, தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா ஊழியர்களின் தகுதி குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 


தொடர்ந்து அங்கு பணியாற்றும் பேராசிரியர்களின் தகுதிகள் பரிசோதிக்கப்பட்டு வந்தன. இதில் மேலாண்மைத் துறை மற்றும் வேளாண்மைத் துறையில் பணியாற்றும் 56 பேராசிரியர்கள் அரசு தகுதி விதிமுறைகளின்படி பணியில் சேராமல், பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.


இவர்கள் மீது ஆட்சி மன்றக் குழு மற்றும் உயர் கல்வித்துறையின் அறிவுரை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலை பதிவாளர் டாக்டர் சிங்காரவேலு தெரிவித்துள்ளார். அரசு விதிகளின்படி அவர்களின் நியமனம் மேற்கொள்ளப்படாததால், தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, துணை வேந்தர் தெரிவித்துள்ளார். 


இதை வாசிக்க: 12th Public Exam Time Table: மார்ச் 1 முதல் 22 வரை: பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதிகள் இவைதான்- அட்டவணையோடு! 


56 பேருக்கு பணிநீக்க உத்தரவு


பல்கலைக்கழக வளாகத்தில் பணியாற்றி வரும் 18 பேருக்கு பணிநீக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகவும், பணி நிரவலில் சென்று வெளி கல்லூரிகளில் பணியாற்றி வரும் 38 பேருக்கு கல்வித்துறை இயக்குனர் அலுவலகம் மூலம் உத்தரவு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல 92 பேராசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். 


இதைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி, பல்கலை. வளாகத்துக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 56 உதவிப் பேராசிரியர்கள் கூண்டோடு நீக்கப்பட்ட சம்பவம், சிதம்பரம் பகுதியில் பலத்த சர்ச்சைகளைக் கிளப்பி உள்ளது. 


இதையும் வாசிக்கலாம்: கல்வித்துறைக்கும் ஆளுநருக்கும் என்ன பிரச்சினை? திருப்பி அனுப்பிய மசோதாக்கள் சொல்லும் ரகசியம் என்ன?