ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு கருவிழி பதிவு முறை கொண்டுவதற்கான வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை அக்டோபர் மாதம் 15 ஆம் தேதிக்குள் அமலுக்கு கொண்டுவர உள்ளதாக மேலும் தெரிவித்தார்.


கண் கருவிழி பதிவு


தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு சரிபார்த்தலில் சில பல சிக்கல் ஏற்பட்டு வரும் காரணத்தால், மற்ற மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் கருவிழி பதிவு முறை கொண்டுவரப்படும் என்று கூறியுள்ளார்.



பல மாநிலங்களில் ஏற்கனவே அமல்


தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கும் குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். மேலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் முழுக்க முழுக்க கண் கருவிழி பதிவு மூலமாக பொருட்கள் வாங்கும் வசதிகள் ரேஷன் கடைகளில் செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர் தனிழ்நாட்டில் 2.15 கோடிக்கும் அதிகமான ரேஷன் அட்டைகள் உள்ளன இவற்றிற்கும் அதே போல செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்.


தொடர்புடைய செய்திகள்: படிச்சுப் படிச்சே நான் வயசாளி ஆயிடுவேன்... கெஞ்சிய குழந்தை உருகிய நெட்டிசன்கள்


கடைக்கு செல்ல முடியாதவர்கள்


மாற்றுத் திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் போன்ற ரேஷன் கடைகளுக்கு நேரடியாக வர முடியாதவர்களுக்கு பதிலாக சம்பந்தப்பட்ட நபர் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்களை பொருட்கள் வாங்கச்செய்ய, அந்த நபரின் பெயரை ரேஷன் கடையில் அதற்கென உள்ள படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் பொருட்கள் வாங்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



அமைச்சர் சக்கரபாணி


இதுகுறித்து பேசிய அவர், "தமிழகத்தில் உள்ள 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் மூலம் பொது விநியோகம் மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்த பொது விநியோகம் கணினி மயமாக்கப்பட்ட பிறகு, முன்பிருந்த பேப்பர் குடும்ப அட்டைகள் மாற்றப்பட்டு அனைவருக்கும் ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து, நியாய விலைக்கடைகளில் விற்பனை முனைய இயந்திரத்தின் உதவியோடு கைவிரல் ரேகை பதிவு சரிபார்க்கப்பட்டு பிறகு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பல நாட்களாக விரல் ரேகை பதிவு சரிபார்த்தலில் சிக்கல் ஏற்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. இதைப் பலமுறை சரி செய்தும் இந்தக் பிரச்சனை தீரவில்லை. எனவே, விரல் ரேகை மின்னணு பதிவேட்டிற்க்கு பதிலாக கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்களைப் பெற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் குடும்ப அட்டையுடன் ஆதார் இணைப்பு இருப்பதால், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இது ஏற்கனவே அமல்படுத்தபட்டுள்ளது. இதற்காக தனியாக கண் கருவிழி பதிவு புதுப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனை அமல்படுத்துவதற்கு தொழில்நுட்ப ரீதியான வேலைகளுக்கான காலம் மட்டுமே தேவை", என்று கூறினார்.