பைக்கர் மற்றும் யூடியூபர் டி.டி.எஃப் வாசனை கோவை சூலூர் போலீசார் கைது செய்துள்ளனர். அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டியதாக அவர் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில் தற்போது கோவை சூலூர் போலீசார் கைது செய்துள்ளனர். காவல் நிலைய விசாரணைக்குப் பிறகு பிணையில் விடுவித்துள்ளனர். சாலை விதிகளை மீறியதாகவும் மிகவும் வேகமாக அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டியதாக அவர் மீது ஏற்கனவே மூன்று வழக்குகள் பதியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. அதன் பிறகு பெங்களூரு தப்பிச் செல்ல திட்டமிட்டதாக கூறப்பட்ட நிலையில், அவரை சூலூர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில், விசாரணைக்குப் பிறகு காவல் துறையினர் அவரை விடுவித்துள்ளனர்.
Twin throttlers என்ற யூடியூப் சேனலை கோவையை சேர்ந்த டிடிஎஃப் வாசன் என்ற இளைஞர் நடத்தி வருகிறார். இவர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த மரக்கடை அதிபரும், பிரபல யூட்யூபருமான ஜி.பி.முத்துவை பைக்கில் அமர வைத்து அதிவேகமாக ஓட்டியுள்ளார். வாகன நெருக்கடி நிறைந்த கோவை - பாலக்காடு சாலையில் 150 கி.மீ.க்கு மேலான வேகத்தில் செல்லும் டிடிஎஃப் வாசன், ஜி.பி.முத்துவுக்கு மரண பயத்தை காட்டி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து டிடிஎஃப் வாசன் மீது போத்தனூர் மற்றும் சூலூர் காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனிடையே போத்தனூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக டிடிஎஃப் வாசன் மதுக்கரை நீதிமன்ற நீதிபதி சரவணன் முன்னிலையில் சரணடைந்தார். காலை 10.30 மணிக்கு சரணடைந்த வாசன், மாலை 5.30 மணி வரை நீதிமன்ற கூண்டில் அமர வைக்கப்பட்டிருந்தார். பின்னர் இரண்டு நபர் உத்தரவாதம் அளித்த பின் மாலையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இது தொடர்பாக கடந்த ஒரு வார காலமாக அமைதி காத்த டிடிஎஃப் வாசன் தனது யூடியூப் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில், “இந்த பிரச்சனை வேகமாக சென்றதால் இல்லை. மீட் அப் வைத்த போது கூடிய மக்கள் கூட்டம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. செய்தி சேனல்கள் பழைய வீடியோக்களை எடுத்து போட்டு சர்ச்சை ஆக்கினார்கள். எல்லாம் நியூஸ் சேனல் ஆரம்பித்ததுதான். வேகமாக செல்வதை குறைத்துக் கொண்டுள்ளேன். 150 கி.மீ. வேகத்தில் சென்றது தப்பு தான். ஆனால் டிரெண்டிங்கில் முதலிடத்திற்கு வந்ததால், அதை பெரிய விஷயமாக்கி இவ்வளவு பெரிய பிரச்சனையை இழுத்திட்டு வந்துட்டாங்க.
தயவுசெய்து இப்படி ஒருத்தன் வாழ்க்கையை அழிக்காதீர்கள். என்மேல 5 வழக்குகள் போட்டுள்ளார்கள். மனம் புண்பட்டது. ஒரு கட்டத்துக்கு மேல நடப்பது நடக்கட்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டேன். எவ்வளவு தான் குனி குருகிப் போவது? தமிழ்நாட்டில் இருந்து லண்டன் போகும் கனவில் மண்ணை போட்டு விட்டார்கள். வாசன் போலீசை மிரட்டியதாக நியூஸ் சேனல் பொய் செய்தி போட்டுள்ளார்கள். ஏன் இப்படி பொய் செய்தி பரப்புகிறீர்கள்? வாழ்க்கையை அழிக்கிறார்கள். எனக்கு பின்னால் கடின உழைப்பு இருக்கிறது. மறுபடியும் வழக்கு போடணும் என நியூஸ் சேனல் நினைக்கிறார்கள் என பேசியிருந்தார்.
போத்தனூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கில் ஜாமீன் பெறப்பட்டு வெளிவந்த நிலையில் தற்போது, சூலூர் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவித்துள்ளனர்.