படிச்சுப் படிச்சே நான் வயசானவன் ஆயிடுவேன் என்று வீட்டுப்பாடம் எழுதுவதைத் தவிர்க்க குழந்தை ஒன்று கெஞ்சி அழும் காட்சி இணையவாசிகளின் நெஞ்சைக் கொள்ளை கொண்டுள்ளது. அதேவேளையில் அந்தக் குழந்தையின் அழுகை இந்திய பாடத்திட்டதின் தோல்வி என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.


அந்த வீடியோவில் குழந்தை ஒன்று இந்தியில் அழுது கொண்டே பேசுகிறது. என்னை தினம் தினம் படிக்கச் சொல்கிறீர்கள். நான் படித்துப் படித்தே வயசாளி ஆயிடுவேன் என்று கெஞ்சுகிறது. குழந்தையின் முன் வீட்டுப் பாட நோட்டும் அதில் இந்தி அகர வரிசை எழுத்துகளும் எழுதப்பட்டுள்ளன. குழந்தையின் அழுகைக்கு கண்டிப்புடன் பதிலளிக்கும் தாய் படிக்கத்தான் வேண்டும். தினமும் படிக்க வேண்டும் படிக்காவிட்டாலும் வயதாகும் தான் என்று சொல்கிறார். குழந்தையின் கொஞ்சல், கெஞ்சல் மொழி சுவாரஸ்யமாக இருந்தாலும் கூட குழந்தையின் வேதனையும் தெரிகிறது.






ஒரு ட்விட்டராட்டி, அந்தக் குழந்தை சொல்வது ஒன்றும் தவறில்லை. குழந்தைகள் படித்துப் படித்தே வயதைக் கடக்கிறார்கள். படிக்க மட்டுமே செய்கிறார்கள். அவர்கள் மீதான கல்வி அழுத்தம் அதிகமாக இருக்கிறது. நமது கல்வித் திட்டத்தில் மிகப் பெரிய புரட்சி ஏற்பட வேண்டும். குழந்தைகள் பள்ளி செல்வதை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டுமே தவிர பள்ளிகளைப் பார்த்து பயந்து ஓடக் கூடாது என்று கூறியுள்ளார்.


இதைப் பார்த்து சிரிக்க வேண்டாம். குழந்தைகள் ரசித்துப் படிக்க வேண்டும். 98% மதிப்பெண் பெறுவதால் மட்டும் வெற்றி உறுதியாகிவிடாது. குழந்தைகள் மீது சுமையை சுமத்தக்கூடாது. நான் குழந்தைகளுக்காக வருந்துகிறேன் என்று எழுதியுள்ளார் இன்னொரு நெட்டிசன்.


கொரோனா காலத்தில் வைரலான வீடியோ:
கொரோனா காரணமாக  இந்தியா முழுவதிலும், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்த வேளையில், ஒரு க்யூட்டான காஷ்மீர் குழந்தை பிரதமரிடம், தனது மழலை குரலில் பிரச்சனையை சொல்லி, புகார் அளிக்கும் வீடியோ வைரலானது. 'அஸ்ஸாலாமு அலைக்கும் மோடி ஜி’ என தொடங்கி அந்த குழந்தை வைக்கும் கோரிக்கையை யாரால் நிராகரிக்க முடியும்.  ஆன்லைன் வகுப்புகள் அதிக நேரம் நடப்பதாகவும், அதனால் தனக்கு வேலை மிக அதிகமாக உள்ளது எனவும், பிரதமர் நரேந்திர மோடியிடம் புகார் அளித்த மஹிரா கானின் வீடியோ என்ற அழகிய குட்டி 6 வயது காஷ்மீர்  சிறுமியின் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. அக்குழந்தையின் அப்பாவித்தனமான பேச்சும், அழகிய முக பாவனைகளுக்கு நெட்டிசன்களை கவர்ந்தது. குழந்தையின் வீடியோ வைரலாகிய பிறகு, ஜம்மு-காஷ்மீர் கல்வித் துறை மாணவர்களுக்கு தினசரி ஆன்லைன் வகுப்புகளுக்கான நேரத்தை குறைக்கு முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.