கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை சென்னையில் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வந்தார். இவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்களில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிக்கான தொடக்க விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய விளையாட்டு அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் தமிழக விளையாட்டு அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
”விளையாட்டு தலைநகராக தமிழ்நாட்டை மாறுவதே இலக்கு"
பின்னர், இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசியதாவது, ”கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடியை வரவேற்கிறேன். எல்லாருக்கும் எல்லாம், அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி என்பதை உள்ளடக்கமாக கொண்ட திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக வளர உழைத்து வருகிறோம்.
ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது எப்படி தமிழ்நாட்டின் இலக்கோ, அதேபோல, இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழ்நாட்டை மாற்றுவதே இலக்கு. இந்த இலக்கை நோக்கி பயணிக்கும் அமைச்சர் உதயநிதியை பாராட்டுகிறேன். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, செஸ் ஒலிம்பியாட் போட்டி உள்ளிட்ட போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்தியுள்ளோம்.
அதே நேரத்தில், விளையாட்டு கட்டமைப்புகளை உலக தரத்தில் உயர்த்தி வருகிறோம். இந்தியாவிலேயே முதல்முறையாக பாரா வீரர்களுக்கு 6 விளையாட்டு அரங்கங்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 10 சட்டமன்ற தொகுதிகளில் மினி விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது.
வீரர்களுக்கு வாழ்த்துக்கள்:
சென்னை, மதுரை, திருச்சி, நீலகிரியில் ஒலிம்பிக் அகாடமி தொடங்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.63 கோடியில் மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக ஏறு தழுவுதல் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை வரும் 24ஆம் தேதி திறந்து வைக்க உள்ளேன். கேலோ இளைஞர் இந்திய விளையாட்டு போட்டி தமிழ்நாட்டில் நடப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி.
கேலோ இளைஞர் இந்திய விளையாட்டு போட்டியின் லோகோவில் திருவள்ளுவர் சின்னம் இடம்பெற்றிருக்கிறது. வீரமங்கை வேலுநாச்சியார் சின்னமும் இடம்பெற்றிருப்பது கூடுதல் பெருமை. பல்வேறு மாநிலங்களில் இருந்து கேலோ இளைஞர் இந்தியா போட்டியில் பங்கேற்ற வீரர்கள் வெற்றி பெற வாழ்த்துகள்” என்றார்.
மேலும் படிக்க