தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள திமுக அரசு நாள்தோறும் அரசியல் ரீதியாக பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றது. அமைச்சர் பொறுப்பில் இருந்து வார்டு கவுன்சிலர் வரை திமுகவில் பொறுப்பு வகிப்பவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களால் ஏற்படும் குற்ற சம்பவங்கள் குறித்து தினந்தோறும் செய்திகள் ஊடகங்களில் வந்த வண்ணம் உள்ளன. அதற்கு தலைமை தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் குற்ற நிகழ்வுகள் மட்டும் குறைந்தபாடில்லை.  


அந்தவகையில், கடந்த சில நாட்களாக சமூகத்தில் அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள செய்தி, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகனின் வீட்டு வேலைக்குச் சென்ற சிறுமியை கொடுமைப்படுத்தியது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியே பேசி வெளியிட்டுள்ள வீடியோதான். அந்த சிறுமி அந்த வீடியோவில் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து பேசுவதைக் கேட்கையில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக உள்ளது. 


வீட்டு வேலைக்கு சென்ற சிறுமியை கொடுமைப்படுத்தியதாக அளித்த புகாரில் எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது நீலாங்கரை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் ஆண்டோ மற்றும் அவருடைய மனைவி மெர்லினா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


இதுதொடர்பாக எதிர்கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனங்களையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியதுடன் உடனடியாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் திரைப்பட இயக்குநரும் சமூக செயல்பாட்டாளருமான பா. ரஞ்சித் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் வேலைசெய்த இளம்பெண்ணை அவரது மகன் மறுமகள் உள்ளிட்ட குடும்பத்தினர் கொடும் சித்திரவதைக்குள்ளாகிய செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இக்கொடூர செயலை புரிந்தவர்கள் மீது எவ்வித பாரபட்சமின்றி தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியும் நிவாரணமும் தாமதமின்றி கிடைத்திட துணை நிற்ப்போம்!” என குறிப்பிட்டுள்ளார். 


அதேநேரத்தில் இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் சமூக வலைதளப்பக்கத்தில் இந்த விவகாரம் தொடர்பாக, “ திருநறுகுன்றம் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ரேகா பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்திருக்கிறார். மேற்கண்ட எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் சேர்ந்து சகோதரி ரேகாவை தொடர்ந்து பல வடிவங்களில் அடித்து துன்புறுத்தி வன்கொடுமை செய்துள்ளனர், “உனக்கு யாரு இருக்கா” என்று சாதிரீதியாக கேட்டு மிரட்டி, அவர் மீது மீண்டும் மீண்டும் தாக்குதலையும் அரங்கேற்றி உள்ளனர். இவர்களது இச்செயல் சாதிய தீண்டாமை ஆணவத்தின் உச்சம். இது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும், காவல்துறைக்கு மனு அளித்த சகோதரி தனக்கு நடந்த முழு உண்மை தன்மையும் கடிதம் மூலமாக அளித்துள்ளனர், பொங்கலுக்கு வீட்டிற்குச் சென்ற சகோதரி ரேகாவிடம் “நீ துன்புறுத்தப்பட்ட சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது. மீறி சொன்னால் கொலை செய்து விடுவோம்” என்றும் மேற்கண்ட குடும்பத்தினர் அனைவரும் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. 


தமிழக அரசு இருவர் மீதும் எஸ்.சி,. எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பை வழங்கி பாதிக்கப்பட்ட சகோதரிக்கு துணையாக நிற்பதும் நம் அனைவரின் தலையைக் கடமை என்று நீலம் பண்பாட்டு மையம் கேட்டுக்கொள்கிறது” என குறிப்பிட்டுள்ளது.