தென் இந்திய பகுதிகளின் மேல், மேலடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
26.06.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று காலை வரை நல்ல வெயில் இருந்த நிலையில் நேற்று மதியம் முதல் சென்னை பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி நகர், ராஜா அண்ணாமலைபுரம், தேனாம்பேட்டை, அடையாறு, ஆயிரம் விளக்கு, அண்ணா சாலை, நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் காற்றுடன் மழை பெய்தது. நேற்று இரவு வரை வானம் கரும் மேகம் சூழ்ந்து காணப்பட்டது. இன்று காலை வானிலை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு: (மில்லிமீட்டரில்)
நுங்கம்பாக்கம்- 37.2, சேலம்- 20.0, வேலூர்-13.0, மதுரை - 5.0, ஊட்டி - 3.0, வால்பாறை- 1.0, சென்னை மாதவரம் - 5.0, கடலூர் விருத்தாசலம் - 37.0, தர்மபுரி பாப்பரப்பட்டி - 13.0, புதுக்கோட்டை - 21.0, சேலம் சாந்தியூர் - 12.0, சேலம் ஏற்காடு - 1.0தஞ்சாவூர் அதிராமபட்டினம் - 11.0, வேலூர் விரிஞ்சிபுரம் - 1.5, செங்கல்பட்டு மேற்கு தாம்பரம் - 0.5, சென்னை எம்ஆர்சி நகர் - 3.5சென்னை நந்தனம் - 23.0, காஞ்சிபுரம் ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி- 6.5, திருவள்ளூர் குட் வில் பள்ளி வில்லிவாக்கம்- 25.0, திருவள்ளூர் புழல்- 24.0 மில்லிமீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் மழையானது அடுத்த 4 நாட்களுக்கு தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
நேற்று தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரையில் 39.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. பாளையங்கோட்டையில் 38.4 டிகிரி செல்சியஸ், வேலூரில் 33.9 டிகிரி செல்சியஸ், சென்னை நுங்கம்பாக்கத்தில் 35.7 டிகிரி செல்சியஸ், மீனம்பாக்கத்தில் 35.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.