அமெரிக்காவுக்கு 3 நாள்கள் அரசுமுறை பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு, இரு நாட்டு உறவு குறித்து அமெரிக்க அதிபர் பைடனுடன் மோடி பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார். பின்னர், அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தில் உரையாற்ற இருக்கிறார்.


பிரதமர் மோடிக்கு அரசு மரியாதை:


வெள்ளை மாளிகைக்கு சென்ற மோடிக்கு 19 குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்பட்டது. இரண்டு நாடுகளின் தேசிய கீதம் பாடப்பட்டது. இதை தொடர்ந்து, மோடியை வரவேற்று பேசிய பைடன், "நான் துணை அதிபராக இருந்த காலத்திலிருந்து நாங்கள் ஒன்றாக நிறைய நேரம் செலவிட்டோம். நான் அதிபராக பதவியேற்ற பின்னர், நாங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் உறவை ஏற்படுத்தினோம். உலக சூழ்நிலையில், இந்தியா-அமெரிக்கா இணைந்து செயல்படுவது அவசியம்.


வறுமையை ஒழிப்பதற்கும், பருவநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதற்கும், சுகாதாரத்தை விரிவுபடுத்துவதற்கும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இந்தியா - அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது. இவை அனைத்தும் அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் மற்றும் உலகிற்கும் முக்கியமானதாகும். 


"ஒன்றாக செயல்பட உறுதி பூண்டுள்ளோம்"


தொழில்நுட்ப ரீதியாகவும், சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நிறைய மாறிக்கொண்டிருக்கிறது. இன்று நாம் எடுக்கும் முடிவு எதிர்காலத்தை பாதிக்கும்" என்றார். தொடர்ந்து பேசிய மோடி, "இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு ஜனநாயக விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டது. இரு நாடுகளின் அரசியலமைப்புச் சட்டம் 'நாம் மக்கள்' என்ற வார்த்தைகளுடன் தொடங்குகிறது. இரு நாடுகளும் நமது பன்முகத்தன்மையில் பெருமிதம் கொள்கின்றன.


கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில், உலக ஒழுங்கு ஒரு புதிய வடிவத்தை எடுத்து வருகிறது. உலக நன்மைக்காகவும், உலக அமைதிக்காகவும், ஸ்திரத்தன்மைக்காகவும், ஒன்றாகச் செயல்பட நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்" என்றார்.


பாதுகாப்பு தொடங்கி விண்வெளி ஆய்வு வரை, பல துறைகளில் இந்திய அமெரிக்க நாடுகளுக்கிடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது. இது இரு நாடுகளுக்கிடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் விண்வெளிப் பிரிவு, இந்திய விமானப்படைக்கு இந்தியாவில் போர் விமானங்களைத் தயாரிக்க, அரசுக்குச் சொந்தமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. அதேபோல, 
ஆர்டெமிஸ் உடன்படிக்கையில் இன்று இந்தியா இணைந்துள்ளது. 


வரும் 2024ஆம் ஆண்டுக்குள், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அமெரிக்காவின் நாசாவும் இந்தியாவின் இஸ்ரோவும் இணைந்து செல்ல ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது, இதில் இந்தியா இணைந்திருப்பது குறித்து அமெரிக்க அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "மனிதகுலத்தின் நலனுக்காக விண்வெளி ஆய்வுக்கான பொதுவான பார்வையை முன்னெடுத்து செல்லும் ஆர்டெமிஸ் உடன்படிக்கையில் இந்தியா இணைய உள்ளது என்பதை அறிவிக்க உள்ளோம்" என்றார்.