செங்கல்பட்டு திருப்போரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திடீரென ஆய்வு மேற்கொண்ட, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
செங்கல்பட்டு (Chengalpattu News): செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். திருப்போரூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்த அவரை பள்ளி தலைமையாசிரியை ஸ்ரீதேவி வரவேற்றார். இதையடுத்து பெண்கள் பள்ளி வளாகத்தில் இருந்த ஆய்வுக்கூடம், கணினி அறை, பள்ளி வகுப்பறைகளை அவர் ஆய்வு செய்தார். கணினி அறையில் இணையதள வசதி செயல்படவில்லை என்று மாணவிகள் அமைச்சரிடம் புகார் செய்தனர்.
கோளாறை உடனடியாக சீர் செய்து தர உத்தரவு
இதையடுத்து கல்வித்துறை உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்ட அமைச்சர் பள்ளிக்கு உடனடி இணையதள வசதியில் ஏற்பட்டுள்ள கோளாறை உடனடியாக சீர் செய்து தர உத்தரவிட்டார். பள்ளிக் கழிப்பறைகள், விளையாட்டு மைதானம் ஆகியவற்றையும் அவர் ஆய்வுசெய்தார். இதைத் தொடர்ந்து வகுப்பறைகளுக்கு சென்ற அமைச்சர் மாணவிகளை படிக்கச் சொல்லி அவற்றில் சில கேள்விகளை எழுப்பினார். மேலும், வருகைப்பதிவேட்டை ஆய்வு செய்த அமைச்சர் நீண்ட நாட்களாக விடுமுறையில் உள்ள மாணவிகள் ஏன் பள்ளிக்கு வரவில்லை, என்று அவர்களின் வீட்டிற்கு சென்று விசாரித்தீர்களா என்று ஆசிரியைகளிடம் கேட்டார்.
மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்
அவர்கள் வெளியூர் சென்றிருந்தாலும், அங்கிருக்கும் பள்ளியில் சேர்ந்தார்களா என்று உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். மகளிர் பள்ளியில் இருந்து மாநில அளவில் கலை நிகழ்ச்சிகளில் பரிசு பெற்ற மாணவியை அழைத்து பாராட்டு தெரிவித்தார். தங்களுக்கு கூடுதல் இட வசதி வேண்டுமென பள்ளி நிர்வாகம் தரப்பில் கோரிக்கை விடுத்ததை ஏற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்த அமைச்சர் பள்ளி தலைமை ஆசிரியை தெமினா கிரேனாப் வரவேற்றார். அதேபோன்று பள்ளி ஆய்வுக்கூடம், வகுப்பறைகள், கணினி அறை ஆகியவற்றை ஆய்வு செய்த அமைச்சர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். ஆசிரியர் பாடம் நடத்தும் முறை பிடித்திருக்கிறதா, புரிகிறதா என்று கேள்வி எழுப்பினார்.
பேச்சுத் திறனை வளர்க்க நடவடிக்கை
கிராமப்புற பள்ளி என்பதால் மாணவர்களிடம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், ஆங்கில பேச்சுத் திறனை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் ஆசிரியர்களை கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வின்போது திருப்போரூர் எம்.எல்.ஏ. பாலாஜி, திருப்போரூர் பேரூராட்சி தலைவர் தேவராஜ், உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.